முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பெரியார் பல்கலை. மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி கால நீட்டிப்பு
By DIN | Published On : 18th May 2019 09:14 AM | Last Updated : 18th May 2019 09:14 AM | அ+அ அ- |

பெரியார் பல்கலைக்கழகத்தின் 27 துறைகளுக்கு உள்பட்ட முதுகலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் கடைசி தேதி மே 24- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் தெரிவித்தார்.
பல்கலையின் 27 துறைகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.டெக் எனர்ஜி டெக்னாலஜி முதுகலைப் பட்டப் படிப்புகளும், எம்.ஏ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் ஐந்தாண்டு பட்டப் படிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை மாணவர்கள் பெறுவதற்கான கடைசி தேதி மே 17-ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் தரப்பிலிருந்து வந்த வேண்டுகோளைத் தொடர்ந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், சமர்பிப்பதற்குமான கடைசி தேதி மே மாதம் 24-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்று மாலைக்குள் சம்மந்தப்பட்ட துறைத் தலைவரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். மே 29 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நுழைவுத் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்களிடமிருந்து விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும் என துணைவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.