வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்: மூவர் மீது வழக்கு- 2 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 09:12 AM | Last Updated : 18th May 2019 09:12 AM | அ+அ அ- |

வருவாய் ஆய்வாளரைத் தாக்கியதாக, மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டி புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலைச் சுற்றி கிராம மக்கள் சார்பில் கம்பி வேலி நடப்பட்டதாகவும், இதில் தங்களுக்குச் சொந்தமான இடத்திலும் கம்பி வேலி நட்டுள்ளதாகவும் அண்ணாமலை, அவரது மகன் பூபதி ஆகியோர் வருவாய்த் துறையிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவப்பெருமாள், கிராம உதவியாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அப்போது கம்பி வேலி அகற்றப்பட்டுள்ளது குறித்து கேட்ட வருவாய் ஆய்வாளரை பூபதி, அவரது நண்பர் சதீஷ், அண்ணாமலை ஆகியோர் தாக்கினராம்.
புகாரின்பேரில் தேவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பூபதி (30), சதீஷ் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அண்ணாமலையைத் தேடி வருகின்றனர்.