"நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும்
By DIN | Published On : 20th May 2019 09:42 AM | Last Updated : 20th May 2019 09:42 AM | அ+அ அ- |

'நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சிஐடியு 11-ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு ) 11-ஆவது மாநில மாநாடு சேலத்தில் இரு நாள்கள் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணித்தளங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 21,000 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.18,000 உறுதிப்படுத்த வேண்டும். உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கும், மோட்டார் ஆப்ரேட்டர்களுக்கும் பணி நிரந்தரம் அளிக்கப்பட வேண்டும்.
ஆயிரம் பீடிக்கும் தரமான இலை 700 கிராம் வழங்கிட வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப ரூ. 300 கூலி வழங்கப்பட வேண்டும். கேட்டரிங்கில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநாட்டு அரங்கில் ஸ்தாபன செயல்பாடுகள் குறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜீ. சுகுமாரன் பேசினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா வாழ்த்திப் பேசினார். வேலை அறிக்கையை மாநில அமைப்பாளர் எம். மகாலட்சுமி முன்மொழிந்தார். புதிய மாநில ஒருங்கிணைப்பாளராக எம். தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டை அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு நிறைவுரையாற்றி வைத்தார். மாநாட்டில் 233 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநிலக் குழு உறுப்பினர் ஆர். வைரமணி நன்றி கூறினார்.