கடும் வெயிலால் பட்டுப் போன தென்னை மரங்கள்
By DIN | Published On : 23rd May 2019 07:18 AM | Last Updated : 23rd May 2019 07:18 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெயிலுக்கு, ஓமலூர் வட்டாரத்தில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து பட்டுபோய் வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் சுமார் 88,540 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வட்டாரங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போதைய வறட்சியால் சுமார் 30 ஆயிரம் தென்னை மரங்கள் முழுமையாக காய்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து விட்டதால், ஆழ்துளைக் கிணறு மூலமாக கூட தண்ணீர் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால், நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை மரங்களே காய்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது. ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி, எம்.செட்டிபட்டி, ஆட்டுக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காடையாம்பட்டி ஆகிய வட்டார கிராமங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் காய்ந்து விட்டன. பருவ மழையும், கோடை மழையும் பெய்யாவிட்டால் தென்னை மரங்களுக்கு உயிர் நீர் கிடைப்பது அரிதாகி விடும். கடந்த 3 ஆண்டுக்கு முன் கடும் வறட்சியால் மாவட்ட அளவில், 87 ஆயிரம் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்தன. அதனால், தென்னை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்கப்பட்டன. இதில், 46ஆயிரம் தென்னை மரங்கள் முற்றிலும் கருகி வெட்டி அகற்றப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் மழை பெய்தது. அதற்கு பிறகு தற்போது அவ்வப்போது குறைந்தளவில் மழை பெய்து வருகிறது. தென்னை மரத்துக்கு ஓரளவுக்கு தண்ணீர் இருந்தாலே காய்ச்சலில் இருந்து காப்பாற்ற முடியும். பெரும்பாலும் தென்னை விவசாயிகள் நீர்நிலைகளை சார்ந்தே நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மேலும், ஏரிகளின் அருகிலும், நீர்நிலையை சார்ந்துள்ள பகுதிகளிலும் அதிகளவில் வளர்க்கப்படும். இந்த மரத்தின் வேர் நீர் அரிப்பை முழுமையாக தடுக்கும் என்பதால், அதிகளவில் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
புதிதாக வைக்கப்பட்டுள்ள தென்னைக்கு தினமும் 200 முதல் 250 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தோப்புகளில் உள்ள தென்னைகளுக்கு சொட்டு நீர்ப் பாசனத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சினால் மட்டுமே வறட்சி பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் தென்னை மரங்களை காப்பாற்ற டிராக்டர் மூலமாக நீர் கொண்டு சென்று பாய்ச்சும் நிலையிருக்கிறது. வெயில் தாக்கம் அதிகமாகி வருவதால் தென்னை மரங்கள் மேலும் பாதிக்கப்படும் நிலையிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது மழையும் பெய்யவில்லை, நீர் நிலைகள் மற்றும் நீர்வழி கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டு வானம் பார்த்த பூமியாக உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வெப்பம் தாங்காமல் தென்னை மரங்கள் காய்ந்து கருகி பட்டுப்போய் வருகின்றன. இந்த சூழல் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, தென்னை மரங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.