எடப்பாடி பகுதியில் பலத்த மழை
By DIN | Published On : 23rd May 2019 07:18 AM | Last Updated : 23rd May 2019 07:18 AM | அ+அ அ- |

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
எடப்பாடி, பூலாம்பட்டி, சித்தூர், வெள்ளரி வெள்ளி உள்ளிட்ட எடப்பாடி சுற்றுப்புறப் பகுதியில், கடந்த சில தினங்களாக நிலவிய அதிகளவிலான வெயிலின் தாக்கத்தால், கடுமையான அனல் காற்று வீசி வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை மாலை திடீரென பலத்தக் காற்று வீசியது. தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் வீட்டின் கூரைகள் பலத்தக் காற்றால் சேதமடைந்தன. திடீரென பெய்த பலத்த மழையால், எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் வெளியூர் செல்ல காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர். திடீர் மழையால் கடந்த சில நாள்களாக வீசிவந்த அனல் காற்று தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது
ஆட்டையாம்பட்டியில்...
மகுடஞ்சாவடி பகுதியில் புதன்கிழமை மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த சூறாவளிக் காற்றால், மகுடஞ்சாவடி-எடப்பாடி சாலையான குப்பாண்டிப்பாளையம், அழகனூர் ஆகிய பகுதிகளில் சாலையோரம் உள்ள மூன்று மரங்கள் அடியோடு சாய்ந்தன. குப்பாண்டிப்பாளையத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது மரம் சாய்ந்ததில் வாகனம் சேதமடைந்தது. அதேபோல், அழகனூர் பகுதியில் ராஜா என்பவரின் வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்த பின்னர், நெடுஞ்சாலைத் துறையினர் சார்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.