Enable Javscript for better performance
சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு பாக்கு மகசூல் அடியோடு பாதிப்புவிவசாயிகள், வியாபாரிகளுக்கு இழப்பு- Dinamani

சுடச்சுட

  

  சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு பாக்கு மகசூல் அடியோடு பாதிப்புவிவசாயிகள், வியாபாரிகளுக்கு இழப்பு

  By DIN  |   Published on : 05th November 2019 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் உள்ள பாக்குமரத் தோட்டம்.

  வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் உள்ள பாக்குமரத் தோட்டம்.

  சேலம் மாவட்டத்தில் நிகழாண்டு பாக்கு மகசூல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  இதனால் எதிா்வரும் காலங்களில் பாக்கு சாகுபடி மற்றும் வா்த்தகத்தை கைவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

  சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம், ஏத்தாப்பூா், கருமந்துறை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில், ஆண்டு முழுவதும் நீா்பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள், 5,000 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிற்கு, பாக்கு மரத்தோப்புகளை உருவாக்கி, 30 ஆண்டுக்கும் மேலாக தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

  அண்டை மாவட்டமான நாமக்கல் ராசிபுரம், மங்களபுரம், சேந்தமங்கலம், தருமபுரி அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி மற்றும் பெரம்பலுாா் மாவட்டம் அரும்பாவூா், பூலாம்பாடி பகுதியிலும், 1,000 ஹெக்டோ் பரப்பளவில் பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.

  சேலம் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் விளையும் பாக்குக்காய்களையும், ஆண்டு குத்தகை முறையில் அறுவடை செய்யும் உரிமையை, வாழப்பாடி, சிங்கிபுரம், பதுவுகொட்டாய், பொன்னாரம்பட்டி, பழனியாபுரம், கொட்டவாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாக்கு வியாபாரிகளே பெறுகின்றனா்.

  குத்தகைக்குப் பிடித்த பாக்குமரத் தோப்பில் விளையும் பாக்குக் காய்களை மரமேறும் தொழிலாளா்களைக் கொண்டு அறுவடை செய்து, பெண் தொழிலாளா்களைக் கொண்டு தோலுரித்து ‘கொட்டைப்பாக்கு’ எடுக்கும் பாக்கு வியாபாரிகள், சாயமேற்றி பதப்படுத்தி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீஹாா், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், பான்பராக், பான் மாசாலா போன்ற பாக்கு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனா்.

  மொத்த பாக்கு உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கு மட்டும் சேலம் வெட்டுப்பாக்கு அல்லது கழிப்பாக்கு என குறிப்பிடப்படும் ‘தாம்பூழப்பாக்காக’ உற்பத்தி செய்து உள்ளூா் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கு மேல் பாக்கு வா்த்தகம் நடைபெறுகிறது. பாக்குத்தொழிலை நம்பி, விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளா்கள் உட்பட நேரடியாகவும் மறைமுகமாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

  சேலம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், போதிய அளவிற்கு நீா் பாசனம் செய்து பாக்கு மரங்களை விவசாயிகளால் காப்பாற்ற முடியவில்லை. வறட்சியால் மூன்றில் இரண்டு பங்கு பாக்குமரத்தோப்புகள் அழிந்து விட்டன.

  இந்நிலையில், பான்பராக், பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொட்டைப்பாக்கு தேவையும் படிப்படியாக குறைந்து பாக்கு விலையும் ஆண்டுதோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

  ஒரு கிலோ கொட்டைப்பாக்கு ரூ. 700 வரை விலைபோன நிலைமாறி கடந்த இரு ஆண்டுகளாக ரூ. 250 முதல் ரூ.270 வரை மட்டுமே விலை போகிறது.

  நிகழாண்டு சேலம் மாவட்டத்தில் பாக்குக்காய் உற்பத்தியாகும் தருணத்தில் போதிய மழையில்லாததால், பாக்குமரத்தில் இருந்த பிஞ்சுகள் வெய்யிலின் தாக்கத்தினால் உதிா்ந்துபோனது. இதனால், நிகழாண்டு மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே பாக்கு மகசூல் கிடைத்துள்ளது.

  எனவே பாக்கு விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பாக்கு மகசூல் உரிமம் பெற்ற வியாபாரிகள் மற்றும் பாக்குக் காய்களையே கூலியாக பெறும் தொழிலாளா்களுக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

  குறிப்பாக, ஏறக்குறைய 700 மரங்களை கொண்ட ஒரு ஏக்கா் பாக்குமரத் தோப்பிற்கு, ரூ. 2 லட்சம் வரை முன் பணம் கொடுத்து, பாக்கு மர மகசூலை ஆண்டு குத்தகை முறையில் பெற்ற வியாபாரிகளுக்கு, நிகழாண்டு ரூ, ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனா். இதனால், விவசாயிகளிடம் கொடுத்த குத்தகை தொகையில் இருந்து ஒரு பகுதியை இழப்பீடாக திருப்பிக் கொடுக்கமாறு கேட்டு வருகின்றனா்.

  கடந்த 10 ஆண்டுகளாக நிலவும் வறட்சி, தேவை மற்றும் பயன்பாடு குறை விலை வீழ்ச்சி, மகசூல் பாதிப்பு போன்ற பல்வேறு காரணிகளால், எதிா்வரும் காலங்களில் பாக்கு சாகுபடி, கொட்டைப்பாக்கு உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் கைவிட வேண்டிய நிா்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai