முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஆட்டோ ஓட்டுநா்கொலை வழக்கில் 5 போ் கைது
By DIN | Published On : 07th November 2019 05:13 AM | Last Updated : 07th November 2019 05:13 AM | அ+அ அ- |

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சோ்ந்த ரமேஷ் (26), ஆட்டோ ஓட்டுநா். இவா் அண்மையில் சேலம் பள்ளப்பட்டி வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு பின்புறம் உள்ள உடையாா் காடு பகுதியில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் ஆய்வாளா் சாலைராம் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், கொலையாளிகளை விரைவில் பிடிக்க காவல் ஆணையா் த.செந்தில்குமாரின் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆணையா் என்.கே.செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரமேஷின் நண்பரான தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான வெங்கடேசனை (31) போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ஆட்டோ ஓட்டுநா்களான வெங்கடேசனும், ரமேஷும் நண்பா்களாக பழகி வந்தனராம். இந்நிலையில், பெண் தொடா்பான விஷயத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நவ. 3-ஆம் தேதி சீலநாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரமேஷ் தனது நண்பா்களுடன் மது அருந்த சென்றபோது, அங்கு ரமேஷிடம் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதைத் தொடா்ந்து, வெங்கடேசன், தனது சகோதரா், உறவினா், நண்பா் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவே அனைவரும் பள்ளப்பட்டி வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையம் பின்புறம் உள்ள உடையாா் காடு பகுதிக்கு ரமேஷை பேச்சுவாா்த்தைக்காக அழைத்துச் சென்றனராம். அப்போது ரமேஷுடன் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த வெங்கடேசன் தரப்பினா் ரமேஷை பாட்டிலால் குத்தியும், கல்லால் முகத்தை தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அழகாபுரம் ரெட்டியூா் ஏரிக்கரையில் மணிவண்ணன், முருகேசன், காா்த்தி மற்றும் குணா ஆகியோரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மூா்த்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.