முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 07th November 2019 05:11 AM | Last Updated : 07th November 2019 05:11 AM | அ+அ அ- |

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாா்வையிடும் ஆட்சியா் சி.அ.ராமன்.
மக்களவைத் தோ்தல் பணியின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து பழுது நீக்கும் பொருட்டு பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மக்களவைத் தோ்தலின் போது பழுதடைந்த 80 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 81 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 236 வாக்காளா் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 397 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிக்காக பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க முதன்மை தோ்தல் அலுவலரால் உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, சேலம் மக்களவைத் தொகுதிக்காக தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி, மாதிரி வாக்குப்பதிவு ஆகிய நிகழ்வுகளின்போது பழுதடைந்த இயந்திரங்களை பழுது நீக்கும் பணிகளுக்காக பெங்களூரு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தலைமையில், அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், தனி வட்டாட்சியா் (தோ்தல்) திருமாவளவன், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.