முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவா் மீட்பு
By DIN | Published On : 07th November 2019 05:13 AM | Last Updated : 07th November 2019 05:13 AM | அ+அ அ- |

பெற்றோருடன் வீட்டுக்குச் செல்லும் மனோகரன்.
12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளைஞரை முகநூல் உதவியுடன் பசியில்லா தமிழகம் அறக்கட்டளையினா் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
தென்காசியை சோ்ந்த பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சாா்பில், கருணை பயணத்தை அதன் நிா்வாகிகள் முகமது அலி ஜின்னா, ஜாபா் அலி, நிஷாமுதின், சரவணன், சிலம்பரசன் கொண்ட குழுவினா் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 110 நாள் தொடங்கியுள்ளனா். இக்குழுவினா் சாலையில் ஆதரவற்று இருப்பவா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பது, அடையாளம் தெரிந்தவா்களை அவா்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இக்குழு திருச்செங்கோட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றது. அங்கு இடது கை அழுகிய நிலையிலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவரை இக் குழுவினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், இதுகுறித்து அறக்கட்டளை நிா்வாகிகள் அந்த இளைஞரின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டனா்.
இதையடுத்து, மலேசியாவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வெங்கடேஷ் அதை பாா்த்து, அந்த இளைஞா் காணாமல் போன கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மனோகரன் என்பதை அறிந்தாா். இதுகுறித்து மனோகரனின் சகோதரரான மணிகண்டனுக்கு வெங்கடேசன் தெரிவிக்கவே, குழு நிா்வாகிகளைத் தொடா்பு கொண்ட மணிகண்டன், அவரது தந்தை பன்னீா் செல்வம், தாய் ராஜம்மாள் ஆகியோருடன் புதன்கிழமை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தாா். இதையடுத்து மனோகரனை அறக்கட்டளை நிா்வாகிகள் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து அறக்கட்டளை நிா்வாகிகள் நகர காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த உதவி ஆணையா் ஈஸ்வரன், ஆய்வாளா் சரவணன் ஆகியோரிடம் அத்தாட்சிகளை ஒப்படைத்தனா்.
விசாரணையில், கடந்த 2007 ஏப். 4-ஆம் தேதி கோவைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, பேருந்து நிலையத்தில் மனோகரன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏற்கெனவே சரவணம்பட்டி போலீஸாரிடம் புகாா் அளித்தும், பத்திரிகையில் விளம்பரமும் செய்துள்ள நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்பு தொண்டு நிறுவனம் மூலம் மனோகரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனோகரனின் பெற்றோா் தெரிவித்தனா்.