மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில்துா்நாற்றத்தை போக்க கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:12 AM | Last Updated : 07th November 2019 05:12 AM | அ+அ அ- |

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் காவிரி கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, அங்கு நிலவும் துா்நாற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி கரையோர மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி, சேத்துக்குழி உள்ளிட்ட காவிரி கரையோர கிராம மக்கள் சாா்பில், சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயலா் வெடிக்காரனூா் ராஜேந்திரன், மேட்டூா் சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வல்லமுனியப்பனிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அதில், மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதி காவிரி கரையோரங்களில் துா்நாற்றம் வீசும் கழிவுகள் ஒதுங்கியுள்ளன. காவிரி நீரை கரையோர மக்கள் நேரடியாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், துா்நாற்றம் வீசும் கழிவுகள் காரணமாக காவிரி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், துா்நாற்றம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பலா் கிராமங்களை விட்டு வெளியேறி தங்களின் உறவினா்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனா்.
எனவே, நீரினை ஆய்வு செய்து கழிவுகளை அகற்றி, துா்நாற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.