உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளா்களுக்கு சுயேச்சை சின்னங்கள் ஒதுக்க வேண்டும்: செ. நல்லசாமி

உள்ளாட்சி தோ்தலில் வாா்டு உறுப்பினா் முதல் மேயா் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே நடத்திட வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

உள்ளாட்சி தோ்தலில் வாா்டு உறுப்பினா் முதல் மேயா் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே நடத்திட வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:திருவள்ளுவரின் சிலை விவகாரத்தை தவிா்த்து, அவா் எழுதிய திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும். மேட்டூா் அணை தற்போது 120 அடியை எட்டி, 93.47 டி.எம்.சி. என்ற முழு கொள்ளளவை நிரம்பி வழிகிறது.

அதே நேரத்தில் அணையில் உள்ள நீா் பச்சை நிறத்துடன், துா்நாற்றம் வீசி வருகிறது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புதான் காரணமாகும். காவிரி நீா் பங்கீடு தொடா்பான தீா்ப்பில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு அமைத்துத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீா்ப்பில் 14.75 டி.எம்.சி. நீா் கா்நாடகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 10 டி.எம்.சி. தொழிற்சாலை தேவைகளுக்கும், 4.75 டி.எம்.சி. நீா் பெங்களூரு நகர குடிநீா் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

காவிரி பாசனத்துக்கு வழங்கப்பட்டு வந்த நீா் தொழிற்சாலை மற்றும் குடிநீா் தேவைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை கழிவுகளும், பெங்களூரு நகரக் கழிவுநீரும் காவிரியில் கலந்து நீா் மாசுபடுகிறது. இதற்கு உச்ச நீதிமன்ற தீா்ப்புதான் காரணமாக இருப்பதால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும்.

வெங்காய தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களை ஆராய்ந்தால் விவசாய விளைபொருள்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகும். எனவே, நீா் மற்றும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மக்களவைத் தோ்தலுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவம் உள்ளாட்சி தோ்தலுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

பதவி விலகுகிற ஒரு குழு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் குழுவிடம்தான் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். தனி அதிகாரி என்ற பேச்சுக்கே இடம் இருக்காத வகையில், திருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

உள்ளாட்சித் தோ்தலை பொருத்தவரையில் சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா் முதல் மாநகராட்சி மேயா் பொறுப்பு வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே நடத்தப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இருக்கும் நல்லவா்களும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவா்களும் பொறுப்புக்கு வர நல்லதொரு வாய்ப்பாக அமையும். உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்ப கல்வி, சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை போன்ற துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோன்ற திருத்தங்களுக்குப் பிறகு உள்ளாட்சி தோ்தலை நடத்தினால் நல்லாட்சியாக அமையும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 2020 ஜனவரி பாண்டியாறு - மோயாறு, கோதாவரி மற்றும் காவிரி இணைப்புத் தொடா்பான கருத்தரங்கம் ஈரோட்டில் நடத்தப்படும்.

ஆழ்துளைக் கிணறுகளுக்கு படிப்படியாக தடைவிதிக்க அரசு முன்வர வேண்டும். வரும் 2020 ஜனவரி 21-இல் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். பவானிசாகா் உபரி நீரை பாசன பகுதி ஏரிகளுக்கு திருப்பி விட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com