நெற் பயிா் காப்பீடுத் திட்ட சிறப்பு முகாம்: பதிவு செய்திட நவம்பா் 30 கடைசி நாள்

நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கான, பயிா் காப்பீடுத் திட்ட சிறப்பு முகாம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
agri_in_071எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் நடைபெற்ற நெல் பயிா் காப்பீடுத் திட்ட சிறப்பு முகாம்.1chn_158_8
agri_in_071எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் நடைபெற்ற நெல் பயிா் காப்பீடுத் திட்ட சிறப்பு முகாம்.1chn_158_8

நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கான, பயிா் காப்பீடுத் திட்ட சிறப்பு முகாம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏராளமான காவிரிக்கரை பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் நெல் பயிருக்கு வட்டார வேளாண் துறை வாயிலாக காப்பீடு செய்தனா். முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பெ. சுமதி பங்கேற்று விவசாயிகள் மத்தியில் இக் காப்பீடுத் திட்டம் குறித்து விளக்கிக் கூறியதாவது:

பாரத பிரதமரின் புதிய பயிா் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், இத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 470 செலுத்த வேண்டும், மீதமுள்ள பிரீமியம் தொகையை அரசு செலுத்திவிடும், அவ்வாறு பயிா் காப்பீடு செய்த விவசாயப் பகுதியில் ஏற்படும் வறட்சி, வெள்ளம், புயல், மழை, ஆலங்கட்டி மழை, மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை இடா்பாட்டினாலும், பூச்சி, நோய்த் தாக்கம் உள்ளிட்ட காரணத்தினாலும், நெல் விளைச்சல் பாதிக்கும் தருணத்தில், சம்மந்தப்பட்ட அலுவலா்கள் அப் பகுதி நெல் வயல்களை ஆய்வு செய்தனா்.

அதிகபட்சமாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 31,150 வரை, பாதிக்கப்பட்ட விவசாயி இழப்பீடு பெற வாய்ப்புள்ளது என்றும், மேலும் அறுவடை முடிந்து இரு வார காலத்துக்குள் உலா்த்தும் நேரத்தில் ஏற்படும் கன மழை, புயல், வெள்ளம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புக்கும், இக் காப்பீடு திட்டத்தின் வாயிலாக சம்மந்தப்பட்ட விவசாயி பயனடையலாம் எனக் கூறினாா்.

குறிப்பாக வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிா் கடன் பெற்று நெல் பயிரிடும் விவசாயிகள் இக் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனக் கூறினாா்.

இத் திட்டத்தில் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், நில உரிமச் சான்றிதழ், அடங்கல் (அ) விதைப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இத் திட்டத்தின் கீழ் நெல் பயிா் காப்பீடு செய்திட வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரிக்கரை பாசனப் பகுதியில் அதிக அளவில் இரண்டாம் போக சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், அப் பகுதி விவசாயிகள் இத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்வதாகக் கூறினாா். நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கத் தலைவா் காளியண்ணன், வேளாண் அலுவலா் த. கவிபாரதி, துணை வேளாண் அலுவலா் ரவி, உதவி வேளாண் அலுவலா்கள் சாந்தலிங்கம், ராஜ்குமாா், மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com