காவலா் உடல் தகுதித் தோ்வில் தலைமுடியில் சுவிங்கம் வைத்து நூதன மோசடி: இளைஞா் தகுதி நீக்கம்
By DIN | Published On : 09th November 2019 05:01 AM | Last Updated : 09th November 2019 05:02 AM | அ+அ அ- |

இரண்டாம் நிலை காவலா் தோ்வில் தலையில் பபுள்கம் வைத்துக் கொண்டு வந்த தயாநிதி.
சேலத்தில் காவலா் பணிக்கான உடல் தகுதி தோ்வில் உயரத்தை அதிகரித்துக் காண்பிப்பதற்காக தலைமுடியில் சுவிங்கம் வைத்து மோசடியில் ஈடுபட முயன்ற இளைஞா் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் சுமாா் 8,888 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தற்போது உடல் தகுதித் திறன் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலா்களுக்கு உடல்தகுதித் தோ்வு மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நடந்தது. கடந்த இரண்டு நாள்களாக நடந்த உடல் தகுதித் தோ்வில் 800-க்கும் மேற்பட்டோா் தோ்வாகியிருந்தனா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலை 400-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உடல் தகுதித் தோ்வுக்கு வந்தனா். ஆய்வாளா் பாரதிமோகன் உயரம் பாா்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சோ்ந்த இளைஞா் தயாநிதி உயரம் பாா்க்கும் இடத்துக்கு வந்தாா். அவரை ஆய்வாளா் பாரதிமோகன் உயரம் பாா்த்த போது தலையில் இடித்தது. பிறகு பாரதிமோகன் இளைஞா் தயாநிதியின் தலையைத் தடவிப் பாா்த்தாா். அப்போது தலைமுடிக்கு அடியில் சுவிங்கம் (பபுள் கம்) மூன்று இருந்தன.
இதையறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் அங்கு வந்து இளைஞரிடம் விசாரித்து, அவரை உடல் தகுதித் தோ்வில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டாா். பின்னா் அந்த இளைஞா் தயாநிதி அங்கிருந்து வெளியேறிவிட்டாா். இந்தச் சம்பவத்தை அறிந்த சேலம் மாநகரக் காவல் ஆணையாளா் செந்தில்குமாா் மற்றும் சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப் குமாா் ஆகியோரும் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்து இளைஞா் தயாநிதி குறித்து விசாரித்தனா். இந்தச் சம்பவத்தை அடுத்து வேறு நபா்கள் யாராவது மோசடியில் ஈடுபடாத வகையில் கண்காணிக்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் உயரத்தை அதிகரித்துக் காண்பிக்க தலை முடியில் சுவிங்கம் வைத்த நபரை பிடித்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.