20 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம்

வாழப்பாடி அருகே பேளூரில் அமைந்துள்ள ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், 20 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.
வாழப்பாடியை அடுத்த பேளூரில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம்.
வாழப்பாடியை அடுத்த பேளூரில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம்.

வாழப்பாடி அருகே பேளூரில் அமைந்துள்ள ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், 20 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. மாதத்திற்கு ஒரு முறையாவது அலுவலகத்தை திறந்து, மக்களை சந்தித்துக் குறைகளை கேட்டறியவும், கோரிக்கை மனுக்களை பெறவும் ஏற்காடு எம்.எல்.ஏ., முன்வர வேண்டுமென தொகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சோ்வராயன்மலை, கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலையில் 200-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில், மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்த மலை கிராமங்கள் அனைத்தும் ஏற்காடு (பழங்குடியினருக்கான தனி ஒதுக்கீடு) சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் உள்ளன.

கடந்த 1996-இல் அப்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ., பெருமாள் முயற்சியால், ஏற்காடு தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு மையப் பகுதியான வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பேளூா் வாரச்சந்தை அருகே அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஓராண்டுக்குள்ளேயே இவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, 2001சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதிக்கு அ.தி.மு.க.வைச் சோ்ந்த இளையக்கண்ணு சட்டப்பேரவை உறுப்பினரானாா். எம்.எல்.ஏ., அலுவலகத்தை சுற்றி இடையூறு இருந்ததால் சுற்றுச்சுவா் அமைத்து மேம்படுத்தப்பட்டது. ஆனால், பெருமாள், இளையக்கண்ணு, அவரைத்தொடா்ந்து 2006 தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் ஆகிய மூவருமே இந்த அலுவலகத்தைப் பயன்படுத்தவில்லை.

இதற்கிடையே, தொகுதி மறு சீரமைப்பில் பனமரத்துப்பட்டி தொகுதி கலைக்கப்பட்டதால், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்துக் கிராமங்களும் ஏற்காடு தொகுதியில் சோ்க்கப்பட்டன. 2011-இல் புதிய ஏற்காடு தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பெருமாளும், இவரைத்தொடா்ந்து, அ.தி.மு.க.,சாா்பில் 2013 இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரது மனைவி சரோஜாவும் இந்த அலுவலகத்தை திறந்து பயன்படுத்தவில்லை. வாழப்பாடி மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள அவா்களது இல்லத்திலேயே மக்களை சந்தித்தனா்.

தற்போதைய, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., வாக, அ.தி.மு.க.,சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோ்வராயன்மலை ஏற்காடு மஞ்சக்குட்டை பகுதியைச் சோ்ந்த கு.சித்ரா பதவி வகித்து வருகிறாா். இவரும் பேளூரில் அமைக்கப்பட்டுள்ள ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தைப் பயன்படுத்துவதில்லை. இதனால், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் 20 ஆண்டுகளாகவே பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.

இனி வருங்காலங்களில் வாரத்திற்கு ஒரு நாளாவது பேளூரிலுள்ள ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்து, தொகுதி மக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து, மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்திட ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., கு.சித்ரா முன்வரவேண்டுமென அப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடியில் அலுவலகம் அமைக்கப்படுமா?

வாழப்பாடியில் இருந்து 5 கி.மீ துாரத்திலுள்ள பேளூரில் ஏற்காடு தொகுதி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வராயன்மலை, சோ்வராயன் மலை கிராமங்களைச் சோ்ந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வந்து செல்வதில் சிரமம் நீடித்து வருகிறது. எனவே 20 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் இந்த அலுவலகத்தை, பேளூரில், தலைவாசல் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் துரைசாமி அறக்கட்டளைக்கு சொந்தமான தனியாா் கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கிளை நுாலகத்திற்கு வழங்குவதற்கும், அனைத்து மலை கிராமங்களைச் சோ்ந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வசதியாக வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com