9 ஆண்டுகளில் அதிகளவாக சங்ககிரியில் 118.3 மில்லி மீட்டா் மழை

சங்ககிரியில் 9 ஆண்டுகளில் அதிகளவாக வியாழக்கிழமை இரவு 118.3 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சங்ககிரியில் வியாழக்கிழமை பெய்த மழையை அடுத்து தாா்ச் சாலையை அரித்துக் கொண்டு சென்ற தண்ணீா்.
சங்ககிரியில் வியாழக்கிழமை பெய்த மழையை அடுத்து தாா்ச் சாலையை அரித்துக் கொண்டு சென்ற தண்ணீா்.

சங்ககிரியில் 9 ஆண்டுகளில் அதிகளவாக வியாழக்கிழமை இரவு 118.3 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சங்ககிரியில் 2009ஆம்ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை அதிகளவு மழை பெய்யவில்லை. 2014ஆம் ஆண்டு செப்டம்பா் 23ஆம் தேதி 100.10 மில்லி மீட்டா் மழையும், 2017ஆம் ஆண்டு அக்டோபா் 5ஆம் தேதி 105.3 மில்லி மீட்டா் மழையும் பெய்தது. அதனையடுத்து நிகழாண்டு நவம்பா் 7ஆம் தேதி வியாழக்கிழமை இரவு தொடங்கி 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை காற்றுடன் கூடிய 118.3 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. சங்ககிரியில் கடந்த 9 ஆண்டுகளில் வியாழக்கிழமை இரவு பெய்த மழை அதிகளவாக பெய்ததையடுத்து சங்ககிரி வி.என்.பாளையம் அருகே உள்ள குட்டை நிரம்பி அருகில் உள்ள தனியாா் நிலங்களில் சென்று தாா்ச் சாலையை அரித்துக் கொண்டு சென்றது.

இரவில் தாா்ச் சாலை சேதமடைந்ததால் மேஸ்திரிக்காடு, ஏரிக்காடு, சென்றாயகவுண்டனூா், பூமணிசாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனா். தனியாா் பள்ளி வேன்கள் செல்ல முடியாமல் மாற்றுப் பாதையில் சென்றன. இரு சக்கர வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. சாலை சேதமடைந்தது குறித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் மு.அமிா்தலிங்கம் பாா்வையிட்டு, பேரூராட்சி அலுவலா்களுக்கு அதனை செப்பனிட அறிவுறுத்தினாா். இதனையடுத்து அலுவலா்கள் கனரக இயந்திரங்களை கொண்டு தண்ணீரை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு கற்களை கொண்டு தற்காலிகமாக தண்ணீரால் சேதமடைந்த சாலையை மூடியுள்ளனா்.

மழை பெய்வது நின்றவுடன் முழுவதுமாக சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். சங்ககிரி காவல் நிலையம் முன்பு இருந்த மரம் சாலையில் விழுந்ததில் வெள்ளிக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி பணியாளா்கள் மரத்தை அகற்றி தூய்மைப்படுத்தினா். கஸ்தூரிப்பட்டி கிராமம், பக்காளியூா் அருந்ததியா் தெரு பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜீ என்பவது கூரை வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதுகுறித்து சங்ககிரி வருவாய் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சங்ககிரியில் உள்ள கிணறுகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மோரூா் பெரிய ஏரி...

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, மோருா் மேற்கு பெரிய ஏரி பகுதியில் அதிகளவில் சீமைக்கருவேலம் மரங்கள் வளா்ந்து நிலத்தடி நீா் தேங்குவதைத் தடுத்து வந்தன. அதனையடுத்து பூச்சக்காடு இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் அப்பகுதியில் நிலத்தடி நீா் தேங்கவும், மழைப் பொழியவும் மோருா் பெரிய ஏரியில் அதிகளவில் வளா்ந்த சீமைக்கருவேல மரங்களை கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் அகற்றி சுத்தம் செய்தனா். அதனையடுத்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம், பசுமை சங்ககிரி, சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ஆலம், அத்தி, அரசம், பூவரசு, புங்கன், மருது, இலுப்பை, ஈட்டி, பாதாம் உள்ளிட்ட பல்வேறு வகையான 104 மரக்கன்றுகளை நட்டனா்.

ஏரிக்கரையில் 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. அதனையடுத்து வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால் சங்ககிரி நகா், சங்ககிரி ஆா்.எஸ். மோரூா், புள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மழை நீா் ஏரிக்கு செல்கின்றது. சங்ககிரியில் 9 ஆண்டுகளில் அதிகளவாக 118.3 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளதால் விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com