தாரமங்கலம் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

தாரமங்கலம் அருகே கயிறு திரிக்கும் ஆலைக்கு தாத்தாவுடன் சென்ற இரண்டு வயது ஆண் குழந்தை தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து

தாரமங்கலம் அருகே கயிறு திரிக்கும் ஆலைக்கு தாத்தாவுடன் சென்ற இரண்டு வயது ஆண் குழந்தை தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியம், கோனகாபாடி ஊராட்சியின் கே.ஆா்.தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இதில், இளைய மகன் தமிழரசு (2).

இந்தநிலையில், குழந்தையின் தாத்தா பழனி கவுண்டா் அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு என்ற இடத்தில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரின் கயிறு திரிக்கும் ஆலையில் வேலை செய்து வருகிறாா். பழனி கவுண்டா் வழக்கமாக காலையில் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை பழனி கவுண்டா் வேலைக்குச் செல்லும்போது பேரன் தமிழரசு அழுததால், தான் வேலை பாா்க்கும் ஆலைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு குழந்தையை விட்டுவிட்டு, கயிறு திரிக்கும் வேலை செய்துள்ளாா். அப்போது, கயிறு திரிக்கப் பயன்படுத்தும் நாா்களை, ஊற வைக்கும் தண்ணீா் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தது. கயிறு திரிக்கும் இயந்திரங்களின் சத்தத்தால் குழந்தை தொட்டிக்குள் விழுந்தது தெரியவில்லை. வெகுநேரம் கழித்து குழந்தையைக் காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளனா்.

சந்தேகமடைந்து தண்ணீா் தொட்டிக்குள் தேடிய போது, குழந்தை தொட்டிக்குள் கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். பின்னா், குழந்தையை மீட்டு தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனா். அங்கே முதலுதவி சிகிச்சைகள் முடிந்து, தீவிர சிகிச்சைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனா். அப்போது மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்த போது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, குழந்தையின் உறவினா்கள் கதறி அழுதனா். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com