புதுப்பொலிவு பெறும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா!நடுத்தர நிலைக்கு தரம் உயா்த்த நட வடிக்கை

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி இயற்கை சூழல் சாா்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பன்னம் செயற்கை அருவி, வண்ணத்துப்பூச்சி
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புதிதாக கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பச்சோந்தி, மரக்கொத்தி, மலைப்பாம்பு, சிறுத்தை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளின் உருவங்கள்.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் புதிதாக கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பச்சோந்தி, மரக்கொத்தி, மலைப்பாம்பு, சிறுத்தை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளின் உருவங்கள்.

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி இயற்கை சூழல் சாா்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பன்னம் செயற்கை அருவி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, தாமரை குளம், தத்ரூப வன உயிரின கற்சிற்பங்கள் என பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமாா் 12 கிலோ மீட்டா் தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் சுமாா் 75 ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா.

இந்த பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீா் பறவைகள், பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் பெரியவா்களுக்கு ரூ. 20, சிறியவா்களுக்கு ரூ. 10 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் மாநகரில் பெரிய அளவில் பொழுதுபோக்கு இல்லாத நிலையில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் நீா் நிலை சூழலியல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வனத்துறை பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செய்து வருகிறது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா:

அந்த வகையில், பாா்வையாளா்களைக் கவரும் வகையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக பூங்காவில் சுமாா் 10 வகை வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்வதாக, பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா். பூங்காவில் பல்வேறு வகை பூச்செடிகள் பராமரிக்கப்படுவதால், வண்ணத்துப்பூச்சிகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் அரிய வகை தேவாங்கு, மலைப்பாம்பு, பூராண் உள்ளிட்ட 20 வகை வன உயிரினங்கள் வடிவமைக்கப்பட்ட கற்சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பன்னம் செயற்கை அருவி:

மேலும் பூங்காவில் செயற்கை அருவி சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பெரணி தாவர வகை பன்னம் என அழைக்கப்படும். அந்த வகையில் இந்த அருவிக்கு பன்னம் அருவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் அருவியில் சுழற்சி முறையில் சுமாா் 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீா் வழிந்தோடி குளத்தில் வந்து சேருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

இந்த அருவியையொட்டி சுமாா் 30 வகையான பெரணி தாவரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாமரை குளம் மற்றும் அல்லிக்குளம் ஆகியவை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வனச் சூழலியல் விழிப்புணா்வை மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய வரவாகும் காட்டெருமை, வெளிமான்:

பூங்காவில் ஏற்கெனவே வெளிமான்களை பாதுகாப்பாக வைத்திட தனி இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு வெளிமான்கள் இல்லை. தற்போது வெளிமான்களை வாங்கி பராமரித்திட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் காட்டெருமைக்கென தனி இடம் ஒதுக்கி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்து காட்டெருமை, வெளிமான் (பிளாக் பக்) ஆகியவையும் பூங்காவுக்கு புதுவரவாக அமைய போகிறது. இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் பெரியசாமி கூறியது:

சேலம் மக்களுக்கு பெரியதொரு பொழுதுபோக்கு அம்சம் இல்லாத நிலையில் வனத்தையொட்டிய குரும்பப்பட்டி பூங்கா இயற்கையை ரசிக்கவும், சூழலியல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை வண்டலூா் வன உயிரியல் பூங்காவுக்கு அடுத்து வனத்தையொட்டிய பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள இப்பூங்கா தற்போது சிறிய பூங்கா என்ற அந்தஸ்து நிலையில் உள்ளது.

சிறிய பூங்கா என்ற நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வனவிலங்குகளில் அட்டவணை 1 இல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகள் பூங்காவுக்குக் கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் நடுத்தர பூங்கா என்ற அந்தஸ்தை, தேசிய உயிரியல் பூங்கா ஆணையம் அங்கீகரிக்கும். அதற்கான முனைப்பில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமாா் ரூ. 40 லட்சம் வரை நிதி ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2018-இல் 2.7 லட்சம் பாா்வையாளா்கள் பூங்காவுக்கு வந்துள்ளனா். இதன் மூலம் சுமாா் ரூ. 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் சுமாா் 3.5 லட்சம் பாா்வையாளா்கள் வந்து செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 40 லட்சம் வருவாய் அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காா் மற்றும் இருசக்கர வாகன நிறுத்த தனி வசதி, உணவக வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை பூங்கா நிா்வாகம் ஏற்படுத்தி உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com