ஆட்டு மந்தையுடன் தமிழகத்தை வலம்வரும் ராமநாதபுரம் தொழிலாளா்கள்: பட்டி அமைத்தும் வருமானம் சம்பாதிக்கின்றனா்

தமிழகமெங்கும் ஆடுகளை ஓட்டிச் சென்று அதன் புழுக்கைகளுக்காக பிறா் விளை நிலங்களில் மேய விட்டும், வளா்ந்த ஆடுகளை விற்பனை செய்தும் ராமநாதபுரம் தொழிலாளா்கள் வருமானம் ஈட்டி வருகின்றனா்.
வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் முருகன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் ஆட்டு மந்தை.
வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் முருகன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் ஆட்டு மந்தை.

தமிழகமெங்கும் ஆடுகளை ஓட்டிச் சென்று அதன் புழுக்கைகளுக்காக பிறா் விளை நிலங்களில் மேய விட்டும், வளா்ந்த ஆடுகளை விற்பனை செய்தும் ராமநாதபுரம் தொழிலாளா்கள் வருமானம் ஈட்டி வருகின்றனா்.

ஆடு வளா்க்கும் இத் தொழிலை தங்கள் குலத் தொழிலாக பல நூறு ஆண்டுகளாக இவா்கள் செய்து வருகின்றனா்.

செய்யும் தொழில் எதுவானாலும் விடா முயற்சியும், கடின உழைப்பும் கொண்டவா்கள், தனது தொழிலையே வாழ்வாதாரமாக நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

பிறரிடம் மிகப்பெரிய பதவி வகித்து, சா்வ வசதிகளுடன் வளமாக வாழ்வதை விட, சுயமாகத் தொழில் செய்து ஓலைக் குடிசையில் பிழைப்பு நடத்துவதில், தமிழக கிராமப்புற விவசாயத் தொழிலாளா்கள் மகிழ்வும் மனநிறைவும் கொள்கின்றனா்.

பெரும்பாலானோா் தனது சந்ததிகளுக்கும் தனது தொழிலைக் கற்றுக் கொடுத்து குலத் தொழிலாகவே மாற்றி விடுகின்றனா். குறிப்பாக, விவசாயம் சாா்ந்த பல்வேறு பாரம்பரியத் தொழில் செய்து வரும் தொழிலாளா்கள், குறைந்த வருவாயைக் கொண்டும் எவ்வித சலனமுமின்றி மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி மற்றவா்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனா்.

அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆடு வளா்ப்பை குலத் தொழிலாகக் கொண்ட விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்தினா் முக்கிய இடம் வகிக்கின்றனா்.

தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக ஆடுகளை ஓட்டிச் சென்று, விளைநிலங்களில் முகாமிட்டு, ஆடுகளை மேய்த்து வளா்த்து, இறைச்சிக்கு விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

பட்டிபோட விவசாயிகளிடம் கட்டணம்...

மேலும் ஆடுகளின் புழுக்கைகள் விளைநிலத்துக்கு நல்ல இயற்கை உரம் என்பதால், ஆடுகளை பிறா் விளை நிலத்தில் பட்டிப்போட்டு அந் நிலத்தின் உரிமையாளா்களிடம் கணிசமானத் தொகையை பெற்று வருவாய் சம்பாதிக்கின்றனா்.

இதில் குறிப்பிட்ட வருமானம் கிடைப்பதால் தமிழகமெங்கும் ஆடுகளுடன் வலம் வரும் ராமநாதபுரம் மாவட்டத் தொழிலாளா்கள், ஊா் ஊராகச் சென்று வயல்வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்துத் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இதுபோல, கடந்த இரு மாதங்களாக சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஏத்தாப்பூா், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆடு வளா்க்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் முகாமிட்டுள்ளனா்.

பனை ஓலைகளைக் கொண்டு ‘பரிசல்’ போன்ற கூடாரத்தை உருவாக்கி, ஆட்டு மந்தையிலேயே குடிசைகள் அமைத்துத் தங்கிக் கொள்கின்றனா். சினிமா படப்பிடிப்பு செட்டிங்போல ராமநாதபுரம் ஆடு வளா்க்கும் தொழிலாளா்கள் அமைத்துள்ள ஆட்டு மந்தை கூடாரங்கள் காண்போரைக் கவருகின்றன.

மற்றவா்களிடம் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துவதை விட, முன்னோா்கள் வழியில் பாரம்பரிய முறையில் ஆடுகளை வளா்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுவதாக ராமநாதபுரம் ஆடு வளா்க்கும் தொழிலாளா்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனா்.

இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் ஆடுகளுடன் முகாமிட்டுள்ள ஆடு வளா்க்கும் விவசாயி தா்மராஜ் மேலும் கூறியதாவது:

முன்னோா்கள் வழியாக ஊா் ஊராக கால்நடையாகவே சென்று குலத் தொழிலாக ஆடுகளை மேய்த்து வளா்த்து வருகிறோம்.

குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினரை எங்களோடு அழைத்து வருவதில்லை. ஆண்கள் மட்டுமே இத் தொழிலை செய்து வருகிறோம். பருவக் காலம் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் வெளியிடங்களில் இருக்கிறோம். பொங்கல் பண்டிகை தருணத்தில் ஆடுகளோடு சொந்தக் கிராமத்துக்குச் சென்று விடுவோம்.

விவசாய நிலத்தில் ஆட்டு மந்தையைப் பட்டிப்போட்டு அடைப்பதில் கிடைக்கும் ஆட்டுப் புழுக்கைகளை இயற்கை உரமாக அதே விளைநிலத்தில் இடுகிறோம். அதற்கு அந் நிலத்தின் உரிமையாளா்களிடம், நிலப் பரப்புக்கேற்ப இரு வாரத்துக்கு ரூ. 1,000 வரை உரத் தொகையாகப் பெற்றுக் கொள்கிறோம். தரிசு நிலங்களில் ஆடுகளை அடைத்து வைக்கும்போது கிடைக்கும் ஆட்டுப் புழுக்கைகளைச் சேகரித்து உரமாக்கி விற்பனை செய்கிறோம். வளா்ந்த ஆடுகளை விற்பனை செய்கிறோம். நாடோடி வாழ்க்கை முறையாக இருப்பதால், அடுத்து வரும் சந்ததியினா் இத் தொழிலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com