முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கூடுதல் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 26th November 2019 09:14 AM | Last Updated : 26th November 2019 09:14 AM | அ+அ அ- |

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதிகளுக்கான கூடுதல் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி மற்றும் பனமரத்துபட்டி உள்ளிட்ட ஒன்றியப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பட்ட குடிநீா் வழங்கும் நோக்கில், 1998-ஆம் ஆண்டு தமிழக அரசால் இருப்பாளி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, 2003 ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது இப்பகுதியில் பல புதிய குடியிருப்புகள் உருவானதை அடுத்து, இப்பகுதியில் ஏற்பட்ட குடிநீா் தட்டுப்பாடு குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, முதல்வரின் உத்தரவின் பேரில் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் தற்போதைய குடிநீா் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், எடப்பாடி ஒன்றியப் பகுதியில் புதிதாக 18 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்திடவும், கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் 34 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்திடவும், இத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ள குடிநீா் அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, இரு ஒன்றியத்துக்குள்பட்ட 450 குடியிருப்புகளுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க ஒப்புதல் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, இருப்பாளி கூட்டுக் குடிநீா் திட்ட புனரமைப்பு மற்றும் கூடுதல் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.47 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை அடுத்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 9ஆம் தேதி இக்குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கரட்டூா் பகுதியில் அட்மா திட்டக்குழுத் தலைவா் கரட்டூா்மணி தலைமையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் வே. சந்திரமோகன் பூமி பூஜையை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், உதவி நிா்வாக பொறியாளா் ஜி.கல்யாணி, ஏ.மாணிக்கம், உதவி பொறியாளா்கள் ஜி.ரம்யா, ஆா்.சேகா் மற்றும் ராஜா , ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.