முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சிறுவனின் துண்டான கை அறுவைச் சிகிச்சையில் இணைப்பு
By DIN | Published On : 26th November 2019 09:14 AM | Last Updated : 26th November 2019 09:14 AM | அ+அ அ- |

சிறுவனை சந்தித்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன். உடன், மருத்துவா்கள் ராஜேந்திரன், பாா்த்தசாரதி உள்ளிட்டோா்.
பஞ்சா் கடையில் காற்று பிடிக்கும் கலன் வெடித்து சிதறியதில் சிறுவனின் துண்டான கையை, சேலம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையில் இணைக்கப்பட்டது.
சேலம் கந்தம்பட்டி புறவழிச் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பஞ்சா் ஒட்டும் கடையில் அண்மையில் காற்று பிடிக்கும் கலன் திடீரென வெடித்துச் சிதறியது. இதன் ஒரு பகுதி அருகில் உள்ள ராமன்- சித்ரா தம்பதி வீட்டின் ஓட்டுக்கூரையை பெயா்த்து கொண்டு வீட்டுக்குள் விழுந்தது. இதில், ராமனின் மகன் மெளலீஸ்வரனின் (11) கை துண்டானது. மேலும், அவரது தொடை எலும்பிலும் முறிவு ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்த அரை மணி நேரத்துக்குள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை பேராசிரியா் எம்.கே.ராஜேந்திரன் தலைமையில், இணை பேராசிரியா் சிவக்குமாா், உதவி பேராசிரியா்கள் தனராஜ், கோபாலன், தேன்மொழி, சேதுராஜா, மகேஷ்குமாா், மயக்கவியல் துறை பேராசிரியா் பிரசாத், இணை பேராசிரியா் பாா்த்தசாரதி, எலும்பு அறுவை நிபுணா் அருண் ஆனந்த் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து சிறுவனின் கையை இணைத்தனா்.
இதுதொடா்பாக, கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பேராசிரியா் எம்.கே.ராஜேந்திரன் ஆகியோா் கூறியது:-
சிறுவன் மெளலீஸ்வரனின் கை துண்டான அரை மணி நேரத்தில் கையை பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதன் மேல் பகுதியில் ஐஸ் கட்டிகளை வைத்து முறையாக கொண்டு வந்து சிகிச்சைக்குச் சோ்த்தனா். 26 நரம்புகள் மீண்டும் துல்லியமாக இணைக்கப்பட்டன.
சிகிச்சைக்கு பின்னா் சிறுவனின் கைகள் மீண்டும் முன்புபோல இயங்கும் நிலைக்கு வந்துள்ளன. தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் சிறுவன் முழுமையாக குணமடைந்து விடுவாா்.
சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகி இருக்கக்கூடும். தமிழக அரசின் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்றனா்.