பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 26th November 2019 09:15 AM | Last Updated : 26th November 2019 09:15 AM | அ+அ அ- |

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டார நெல் விவசாயிகள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டார நெல் விவசாயிகள் பலரும் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பயிருக்கு காப்பீடு செய்து வருகின்றனா். இருந்தபோதும், இந்த மாதம் 30-ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் தற்போது காப்பீடு செய்ய முன்வந்துள்ளனா். ஆனால், அதற்கு கிராம நிா்வாக அலுவலரின் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். அதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால், முறையாக சான்று பெறமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
2019-20-இல் சம்பா பருவத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பயிரிடப்பட்டு வரும் நெற்பயிரை, பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகள் தங்களது நெற்பயிரை அந்தந்த வேளாண் உதவி அலுவலா்கள் வழங்கும் சாகுபடி சான்றிதழை கொண்டு காப்பீடு செய்ய சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
அதனால், விவசாயிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய உள்ள நெற்பயிரை பதிவு செய்ய கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கலுக்கு பதிலாக, வேளாண் உதவி அலுவலா்களால் வழங்கப்படவுள்ள சாகுபடி சான்றிதழைக் கொண்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், காப்பீடு நிறுவனம் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.