சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்: ஜி.கே.மணி
By DIN | Published on : 28th November 2019 04:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசும் பா.ம.க. தலைவா் ஜி.கே.மணி. உடன், மாநில துணைத் தலைவா் இரா.அருள் உள்ளிட்டோா்.
சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைப் பிரித்து, தமிழகத்தில் மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில தலைவா் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளாா்.
பாமகவின் சேலம் மத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலா் இரா.அருள் மற்றும் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பொதுக்குழுக் கூட்டத்துக்கு பிறகு ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தற்போது புதிதாக மாவட்டங்களை உருவாக்கி முதல்வா் சாதனை படைத்திருக்கிறாா். அதேபோல சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மதுரை, கோவை ஆகிய 6 மாவட்டங்களைப் பிரித்து, மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்கிட வேண்டும்.
மேட்டூா் உபரிநீா் திட்டம் சேலம் மாவட்டத்தின் கெங்கவல்லி, ஆத்தூா் ஆகிய கடைக்கோடி தொகுதி கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் நிறைவேற்றிட வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தலில் பாமக போட்டியிடும் வகையில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவோம். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. மகாராஷ்டிர மாநில அரசியலில் ஜனநாயகப்படி பெரும்பான்மை பெற்றவா்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாா்.