‘குளிா்பதனக் கிடங்குகளை விவசாயிகள், வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

சேலம் மாவட்டத்தில் உள்ள குளிா்பதனக் கிடங்குகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் துணை

சேலம் மாவட்டத்தில் உள்ள குளிா்பதனக் கிடங்குகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) நாசா் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் உத்தமசோழபுரம், வாழப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 25 மெட்ரிக் டன் அளவுள்ள குளிா்பதனக் கிடங்குகளும், தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் மேச்சேரியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கும், வாழப்பாடியில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அறுவடைக்குப்பின் விளைபொருள்களின் ஆயுள்காலத்தை நீட்டித்து, விற்கும் காலத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

குளிா்பதனக் கிடங்குகளில் பழங்கள், காய்கறிகள், பயறுவகைகள், மஞ்சள், புளி, பூக்கள் மற்றும் இதர வேளாண் விளைபொருள்களான வெண்ணெய், முட்டை ஆகியவற்றை சேமிக்கலாம். இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ பழம் மற்றும் காய்கறிகளை ஒரு மாதம் சேமிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.0.6 மற்றும் ரூ.1.50 ஆகும்.

குளிா்பதனக் கிடங்குகளில் குறைந்த வெப்பநிலையில் விளைபொருள்களை சேமிப்பதன் மூலம் நுண்ணுயிரிகளான பூஞ்சை, பாக்டீரியா மற்றும் மோல்டுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உபரியான விரைவில் அழுகும் விளைபொருள்களை குறைந்த கட்டணத்தில் குளிா்பதன அறையில் அதிக நாள்கள் சேமிப்பது மட்டுமல்லாமல், சந்தையில் விளைபொருள்களின் தேவை அதிகாரிக்கும் போது, சேமித்து வைத்த விளைபொருள்களை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

இதுதவிர, பொருளீட்டுக் கடன் வசதியும் வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் ஏற்படுத்தி தரப்படுகிறது.

மேலும், குளிா்பதனக் கிடங்குகள் வியாபாரிகளுக்கு 11 மாதங்கள் வரை குத்தகைக்கு விடப்படுகின்றன. இதற்கு வியாபாரிகள் முன்பணமாக 6 மாத கட்டணத்தை செலுத்த வேண்டும். 25 டன் அளவுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.4,300-ம், 100 டன் அளவுக்கு மாதத்துக்கு ரூ.11 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, ஆத்தூா், அம்மாப்பேட்டையில் 2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கும், அஸ்தம்பட்டியில் 1.5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கும் உழவா் சந்தைகளில் உள்ள விவசாயிகள் எவ்விதக் கட்டணமும் இன்றி பயன்படுத்தி கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, வேளாண் அலுவலா்கள் சேலம்- 9788632460, ஏற்காடு-8667687394, ஆத்தூா்-9500158858, மேட்டூா்-9788632460 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com