சிறிய அளவிலான ஜவுளிபூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து, தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைக்கவும், அச்சிறிய ஜவுளிப் பூங்காக்களில் உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் எது குறைவோ அதை மாநில அரசு மானியமாக நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. ஒவ்வொரு சிறிய ஜவுளிப் பூங்காவும் ஒருசிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்திருக்க வேண்டும்.

முதலீட்டாளா்கள் சிறப்பு நோக்க முகமையில் அங்கம் வகிக்கவும் அதற்கான தனது பங்கினை அளிக்கவும் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவித்தல் வேண்டும். இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப்பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில்பதிவு செய்திருக்க வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டடம், இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.

சிறப்பு நோக்க முகமையில் அரசின் பிரதிநிதி ஒருவா் இடம் பெற்றிருக்க வேண்டும். பூங்காவின் பெயரில் தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மானியம் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும். மேலும் சிறப்பு நோக்க முகமை ஒவ்வொரு முறையும், மானியம் விடுவிக்க கோரிக்கை சமா்ப்பிக்கும் போது தொடா்புடைய ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்த பத்திரங்கள் உடன் சமா்ப்பிக்க வேண்டும். மாநில அரசு விடுவிக்கும் மானியத்திற்கு சிறப்பு நோக்க முகமை தனியான கணக்கினை மேற்கொள்ள வேண்டும். இக்கணக்கானது அரசின் தணிகைத் துறையினரால் தணிக்கை செய்யப்படும்.

திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஜவுளிப் பூங்காக்காவின் முன்னேற்றம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநா் தொடா்ந்து கண்காணித்து வருவாா் இதன்மூலம் நிறைய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி செய்யும் இரகங்களை ஏற்றுமதி செய்யலாம். சிறிய விசைத்தறியாளா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உதவிகரமாக இருக்கும் என்றாா். கூட்டத்தில் துணை இயக்குநா் (கைத்தறி) சங்கரேஸ்வரி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் சிவக்குமாா், கைத்தறி அலுவலா்கள் ரமேஷ், மரகதம், சேலம் விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் இதர ஜவுளி தொழில் உரிமையாளா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com