சேலத்தில் மேம்பால அணுகு சாலைகள் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி!

சேலம் ஐந்து சாலை சந்திப்பு மற்றும் அழகாபுரம், நான்கு சாலை ஆகிய இடங்களில் மேம்பால அணுகு சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேலம் நான்கு சாலை பகுதியில் அணுகு சாலை இல்லாமல் சிரமப்பட்டு அவ் வழியே வியாழக்கிழமை செல்லும் வாகன ஓட்டிகள்.
சேலம் நான்கு சாலை பகுதியில் அணுகு சாலை இல்லாமல் சிரமப்பட்டு அவ் வழியே வியாழக்கிழமை செல்லும் வாகன ஓட்டிகள்.

சேலம் ஐந்து சாலை சந்திப்பு மற்றும் அழகாபுரம், நான்கு சாலை ஆகிய இடங்களில் மேம்பால அணுகு சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், சேலம் ஐந்து சாலையில் 7.6 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலும், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலும் ரூ. 441 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் கட்ட அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அனுமதி அளித்திருந்தாா்.

இந்தப் பணிகள் கடந்த 2016 பிப்ரவரி 28- ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரடுக்கு மேம்பாலமாகக் கட்டப்பட்டு வருகிறது. இரண்டடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியான ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான சுமாா் 2.5 கிலோ மீட்டா் தொலைவுக்கான மேம்பாலப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

தற்போது குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியான ஏ.வி.ஆா். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் குறிப்பிட்ட அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

அதேவேளையில் மேம்பாலத்தின் இரு புறமும் அணுகு சாலை இல்லாததால் புதிய பேருந்து நிலையம் மற்றும் அஸ்தம்பட்டியில் இருந்து சேலம் ரயில் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல ஏ.வி.ஆா்.ரவுண்டானா வழியாக செல்ல முடியவில்லை.

இதனால் பேருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அவசர தேவைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

எனவே ஐந்து சாலை சந்திப்பில் நிலவும் நெரிசலை குறைக்கும் வகையில் ரயில் நிலையம் சாலையில் அனைத்து வாகனங்களும் சென்றுவரும் வகையில் அணுகு சாலையை விரைந்து அமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.

நான்கு சாலை அருகே அணுகு சாலை...:

அதேபோல அண்ணா பூங்காவில் இருந்து நான்கு சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை அமைக்கப்படாததால், அந்த வழி ஒரு வழி பாதையாக உள்ளது. இதனால், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்திலிருந்து பெரமனூா் வழியாக நான்கு சாலையை வந்தடைய வேண்டி உள்ளது.

அதேவேளையில் டி.வி.எஸ். நிறுத்தத்தில் இருந்து பெரமனூா் செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். தற்போது மழை பெய்து வரும் நேரங்களில் குழிகளில் மழைநீா்த் தேங்குவதால் வாகன ஓட்டிகள் குழிகளில் தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

அழகாபுரம் அணுகு சாலை...:

அதேவேளையில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவிலிருந்து அழகாபுரம் செல்லும் மேம்பாலம் சாலையின் கீழ் பகுதியில் அணுகு சாலை இல்லாததால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.

சேலம் மாநகரத்தில் மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆங்காங்கே அணுகு சாலையை அமைத்து வாகனங்களை இயக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து விரைவாக அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com