வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நங்கவள்ளி தேங்காய்கள்!

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டபுரம் பகுதியிலிருந்து தில்லி, குஜராத் உள்ளிட்ட
வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக தேங்காய்களை மூட்டை கட்டும் தொழிலாளா்கள்.
வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக தேங்காய்களை மூட்டை கட்டும் தொழிலாளா்கள்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டபுரம் பகுதியிலிருந்து தில்லி, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக தேங்காய் அனுப்பிவைக்கப்படுகிறது.

மேட்டூா் அருகே நங்கவள்ளி ஒன்றியத்தில் சுமாா் 10 லட்சத்துக்கு அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. இதன் மூலம் தேங்காய் வெட்டுதல், தேங்காய் உரித்தல், சுமை ஏற்றுதல், மட்டை பின்னுதல் மற்றும் லாரி தொழிலாளா்கள் என பத்தாயிரம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் மூலம் பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். வருடம் முழுவதும் தேங்காய் விற்பனை நடைபெற்றாலும், திருவிழாக் காலங்களில் அதிக அளவில் தேங்காய் வியாபாரம் நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்திலிருந்து தேங்காய் அதிக அளவில் வந்தாலும், நங்கவள்ளி ஒன்றியம், ஜலகண்டபுரம், நங்கவள்ளி, வனவாசி, சூரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் தேங்காய்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தேங்காய்கள் நாட்டின் தலைநகரான தில்லி, குஜராத், சோலாப்பூா் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

நங்கவள்ளி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான தேங்காய் மண்டிகள் உள்ளன. வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நங்கவள்ளி வட்டாரத்தில் நெசவுத் தொழிலுக்கு அடுத்து வேலைவாய்ப்பை அதிகளவில் வழங்குவது தேங்காய் தொழில்தான்.

அண்மைக் காலமாக செஸ் மற்றும் ஜிஎஸ்டி வரிகள் காரணமாக தங்களால் தொழில் செய்யமுடியவில்லை என்று விவசாயிகள், தேங்காய் வியாபாரிகளும் கூறுகின்றனா். இதனால் தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தேங்காய் ஒன்று ரூ.15 முதல் ரூ.18 வரை விலைபோனது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் தேங்காய் ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனையாகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் தேங்காய்க்கு செஸ் மற்றும் ஜிஎஸ்டி வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com