மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 51 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 51 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தொடர் விடுமுறையை ஒட்டி பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேட்டுப்பாளையம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து பவானி ஆற்றில் குளித்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தேக்கம்பட்டி அருகே உள்ள பம்ப் ஹவுஸ் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பில்லூர் அணையில் மின் உற்பத்திக்குப் பிறகு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 51 பேர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் சிக்கிக் கொண்டனர்.
அப்போது, ஆற்றின் நடுவே இருந்த மேட்டின் மீது ஏறியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் நடுவில் சிக்கியிருந்த 51 பேரையும் சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் படகு மூலம் மீட்டனர்.  இதனால், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com