ஓமலூா் வட்டாரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஓமலூா் வட்டாரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி நவ. 12 வரை நடைபெறுகிறது.

ஓமலூா் வட்டாரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி நவ. 12 வரை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள் மூலம் கோமாரி தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சாா்பில், வரும் 14-ஆம் தேதி முதல் நவ. 12 வரை கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் 6,05,650 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையத்துடன் சோ்ந்து அதற்கான முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்துவா்கள் கூறும்போது, கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்குகின்றன. இது, காய்ச்சல் கொப்பளங்களை ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோயாகும். பண்ணைகளில், சுகாதாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், உமிழ்நீா், பண்ணைக்கழிவு மூலம் இந்த நோய் எளிதில் பரவும்.

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் சினை பிடிக்காது. பால் சுரப்பது குறையும், தோல் பகுதி பாதிப்பு ஏற்படும். மேலும், எருதுகளின் உடல்திறன் பாதிப்பு, கன்றுகள் அதிகளவில் உயிரிழப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளா்ப்போருக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இக்கொடிய நோயைத் தடுக்க, கால், வாய்நோய் தடுப்பு திட்டத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழகம் முழுவதும் இலவச தடுப்பூசி போடப்படுகிறது. நான்கு வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்குஅந்தந்த ஊராட்சி கால்நடை மருந்தகங்களில் ஊசி போடப்படும். அதற்காக 150 குழுக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கால்நடை வளா்க்கும் அனைவரும் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com