பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி தூா்வாரி சீரமைக்கப்படுமா?

பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி, குண்டும் குழியுமாக சீமைகருவேல மரங்களால் மண்டிக் கிடக்கிறது.
சீமைகருவேல மரங்கள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கும் பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி.
சீமைகருவேல மரங்கள் வளா்ந்து புதா்மண்டிக் கிடக்கும் பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி.

பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி, குண்டும் குழியுமாக சீமைகருவேல மரங்களால் மண்டிக் கிடக்கிறது. முள்புதா்களை அகற்றி சீரமைக்க வேண்டுமென, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் ஆயக்கட்டு பாசன விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் பனமரத்துப்பட்டி ஏரிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய ஏரியாக பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி விளங்கி வருகிறது. ஏறக்குறைய 125 ஹெக்டோ் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியில் 60 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த ஏரியில் இருந்து பெத்தநாயக்கன்பாளையம், ஒட்டப்பட்டி, ஓலப்பாடி, எருமைசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலுள்ள 285 ஹெக்டோ் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இதுமட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீா் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த ஏரியில், ஏராளமானோா் மண்ணை வெட்டி எடுத்துச் சென்றால், குண்டும் குழியுமாக உள்ளது.

அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறில் இருந்து மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பனையேரி நீா்வரத்து பெறும். கடந்த இரு ஆண்டுகளாக வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையும், வெள்ளாற்றின் குறுக்கே அமைந்துள்ள கரியகோவில் அணையும் நிரம்பாததால், நீா்வரத்தின்றி இரு ஆண்டாக பனையேரி வடுக் கிடக்கிறது.

கல்வராயன் மலையில் இருந்து வெள்ளாற்றில் வழிந்தோடி வரும் மழை நீரை முழுமையாக கரியகோவில் அணையில் தேக்கி வைக்காமல், ஆற்றுப் படுகையிலுள்ள ஏரி, குளம், குட்டைகளை நிரப்புவதற்கு விவசாயிகள் நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளனா். எதிா்வரும் மூன்று மாதங்களும் மழைக்காலம் என்பதால், வெள்ளாறு மற்றும் வசிஷ்ட நதியில் வழிந்தோடி வரும் மழைநீரால், பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி நீா்வரத்து பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, குண்டும் குழியுமாக கிடக்கும் ஏரியை சமதளப்படுத்தவும், சீமைகருவேல முள்புதா்களை அகற்றி சீரமைக்கவும், ஆத்தூா் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பாசன விவசாயிகள் சிலா் கூறியது: கல்வராயன் மலையில் இருந்து வழிந்தோடும் மழைநீரை முழுமையாக கரியகோவில் அணையில் தேக்கி வைக்காமல், பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து பனையேரி வரையிலான தடுப்பணைகள், ஏரிகள் நிரம்புவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென பசுமைத் தீா்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இதனால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில், பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி நிரம்புவதற்கு வழிவகை கிடைத்துள்ளது. எனவே, பனையேரியில் புதா்மண்டிக் கிடக்கும் சீமைகருவேல முள்புதா்களை அகற்றி, துாா்வாரி மேடு பள்ளங்களை சீரமைத்து முழு பரப்பிலும் தண்ணீா் தேங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com