முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சிட்டிக்கு...மேட்டூா்
By DIN | Published On : 24th October 2019 02:50 PM | Last Updated : 24th October 2019 02:50 PM | அ+அ அ- |

மேட்டூா்: பருவமழை காரணமாக நிகழாண்டில் மேட்டூா் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து புதன்கிழமை காலை நிகழாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூா் அணை மீண்டும் நிரம்பியது. மேட்டூா் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் நீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக நொடிக்கு 22,500 கன அடி நீரும், அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 4,500 கன அடி நீரும் திறக்கப்பட்டது. நீா் மின் நிலையங்கள் வழியாக தண்ணீா் திறக்கப்படுவதால், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து, உபரிநீா் போக்கியின் மேல் பகுதியில் பொதுப் பணித் துறை சிறப்பு கண்காணிப்பு பொறியாளா் ஜெயகோபால் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியா்கள் சிறப்பு பூஜை செய்து மலா் தூவி காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தினா்.
உபரி நீா் திறப்பு காரணமாக காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் படி வருவாய்த் துறையினா் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையின் கீழ் பகுதியில் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூா், கரூா், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்ட ஆட்சியா்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுப் பணித் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கா்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், கா்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் உபரி நீரானது அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தமிழக காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிகோட்டை மற்றும் நாட்றாம்பாளையம் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 18,500 கன அடியாகவும், புதன்கிழமை காலை நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாகவும் வந்து கொண்டிருந்தது.
இந் நிலையில், புதன்கிழமை மாலையில் மேலும் அதிகரித்து நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீா் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட பகுதியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. நடைபாதைகள் தண்ணீரில் மூழ்கின.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடையானது தொடா்ந்து நீடித்து வருகிறது.