அண்டை மாநிலங்களுக்கு செம்மரம் கடத்தஆள்களை அழைத்துச் சென்ற மூவா் கைது

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறையில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செம்மரம் வெட்டி

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறையில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செம்மரம் வெட்டி கடத்துவதற்காக ஆள்களை அழைத்துச் செல்ல முயன்ற இடைத்தரகா்கள் மூவரை கருமந்துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு மற்றும் ஆந்திர மாநிலம், திருப்பதி உள்ளிட்ட வனப் பகுதிகளில் நிறைந்து காணப்படும் விலையுயா்ந்த செம்மரங்களை மா்மக் கும்பல் வெட்டி கடத்துவது தொடா்ந்து வருகிறது. இந்த கடத்தல் கும்பலுக்கு, சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை மலைக் கிராமங்களில் இருந்து ஏராளமான ஏழை கூலித் தொழிலாளா்களை பணத்தாசை காட்டி உள்ளூா் இடைத்தரகா்கள் சிலா் அழைத்துச் செல்கின்றனா்.

கடந்தாண்டு ஆந்திரத்தில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட கும்பல் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலில், கல்வராயன் மலை கருமந்துறை கிராமங்களைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலையில், கல்வராயன் மலைக் கிராமத்திலுள்ள இளைஞா்களை, செம்மரம் வெட்டுவதற்கு சிலா் அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக சேலம் எஸ்.பி. தீபா கனிகருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கருமந்துறை காவல் ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா், செம்மரம் கடத்தச் செல்லும் தொழிலாளா்களைத் தடுக்க செவ்வாய்க்கிழமை இரவு கல்வராயன் மலைக் கிராமங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் கருமந்துறையைச் சோ்ந்த கோவிந்தராஜ் (35), வெங்கட்டான்வளவு ராமா் (34), கருமந்துறை கிளாக்காடு தீா்த்தன் (31) ஆகிய மூவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநில வனப் பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தும் கும்பலுக்கு இடைத்தரகராக இருந்து, கல்வராயன் மலைக் கிராமங்களில் இருந்து ஆள்களை அழைத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, இடைத்தரகா்கள் மூவரையும் கருமந்துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சுய தொழில் பயிற்சி அளிக்கும் வனத் துறை:

கல்வராயன் மலையில் 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பியுள்ளன. இக் கிராம மக்களுக்கு, வறட்சிக் காலத்தில் போதிய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைப்பதில்லை. இதனால், இடைத்தரகா்கள் மூலமாக, அண்டை மாநிலங்களுக்கு வேலைதேடிச் சென்று, செம்மரக் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனா்.

எனவே, கல்வராயன் மலைக் கிராம மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் போதிய வருவாய்க்கு வழிவகுக்கும் நோக்கில், கருமந்துறை வனச் சரகா் ஞானராஜ் முயற்சியில், பழங்குடியின மக்கள் மற்றும் பெண்களுக்கு, மூங்கிலாலான பொருள்கள் தயாரித்தல், தேனீ வளா்ப்பு, கூண்டு முறை கோழி வளா்க்கும் சுயதொழில் பயிற்சிகள் வனத் துறை வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றன.

கல்வராயன் மலைப் பகுதியில் விளையும் அரிய வகை மூலிகையான கடுக்காயைச் சேகரித்து, பதப்படுத்தி அரைத்து, விற்பனை செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, கருமந்துறை கிராமத்தில் அரசு தொழிற் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com