பாண்டியாறு - மோயாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் மனு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு முன்னோடி திட்டமாக பாண்டியாறு - மோயாறு திட்டத்தை நிறைவேற்றிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு முன்னோடி திட்டமாக பாண்டியாறு - மோயாறு திட்டத்தை நிறைவேற்றிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி புதன்கிழமை அளித்த மனு விவரம்:
 தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை கீழ்பவானி அணையாகும். கீழ்பவானி பாசனத்துக்கு வித்திட்ட எம்.எ.ஈஸ்வரனுக்கு, பவானிசாகர் அணை பூங்கா வளாகத்தில் நினைவு தூண் நிறுவ வேண்டும். பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் மூன்று தலைமுறைகளாக நடந்து வரும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
 கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தின் முன்னோடியாக பாண்டியாறு - மோயாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தில், தமிழக கேரள எல்லையில் தடுப்பு அணை கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் தமிழகத்திற்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இந்தத் தண்ணீரை திருப்பினால் உபரி நீர் திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டம் உரிமை நீர் திட்டமாக மாறும். ஆண்டு தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் நிரந்தரமாக கிடைக்கும்.
 பாண்டியாறு - புன்னம்புழா நீர், பவானி பாசனங்களின் நீர் பற்றாக்குறையை நிரப்பும். கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் காவிரி டெல்டா பாசனங்களுக்கும் கூடுதலான வளம் சேர்க்கும்.
 வீராணம் ஏரிக்குச் சென்று சென்னைக்கு குடிநீராகச் செல்லும். கேரளத்துக்கு மின்சாரம், தமிழகத்துக்கு தண்ணீர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் நிதியைக் கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்திருக்கும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
 பெட்ரோல் விலையைப் போல தினமும் காவிரி நீர் பங்கீடு இருந்தால் மட்டுமே தீர்வு எளிதாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். காவிரி தீர்ப்பில் தினமும் நீர் பங்கீடு என்ற அம்சம் இடம்பெற்றிருந்தால், நடப்பாண்டில் மேட்டூர் உபரிநீர் பயன்பாடு இல்லாமல் கடலில் வடிந்திருக்காது.
 மேலும், இஸ்ரேல் நாட்டில் இருப்பதைப் போல சொட்டுநீர் உள்ளிட்ட பாசன முறைகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் இஸ்ரேல் செல்லும் போது அங்குள்ள நீர்ப் பாசன தொழில்நுட்பங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com