வாழப்பாடி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? தொடரும் நகைப் பறிப்பு சம்பவங்கள்

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சி 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சுற்றுப்புறக் கிராமங்கள் மட்டுமின்றி, கல்வராயன்மலை, அருநூற்றுமலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, சந்துமலை கிராமங்களைச் சேர்ந்த மக்களும், போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகளுக்கும், விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச்செல்லவும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.
 இதனால், வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையத்துக்கும் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு வாழப்பாடி பேருந்து நிலையத்தில் முகாமிடும் இளம்பெண்களுடன் கூடிய மர்மக் கும்பல், தங்கநகை அணிந்து வரும் பெண்கள், மூதாட்டிகளிடம் பேச்சுக்கொடுத்து கவனத்தை திசைத்திருப்பி நகையைப் பறித்துச் செல்வது தொடர்ந்து வருகிறது.
 சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணவும் வசதியாக, வணிகர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், கடைவீதி, சந்தைப்பேட்டை, உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறை வாயிலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், நகரங்களுக்கு இணையாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் வாழப்பாடி பேருந்து நிலையம், தினசரி சந்தை, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.
 இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மர்மக் கும்பல், கடந்த மாதம் 31-ஆம் தேதி இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி செல்வி(55) என்பவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கலியை பறித்துச் சென்றது. இதனையடுத்து, கடந்த 8-ஆம் தேதி துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு (70) என்பவரிடம் பேச்சுக்கொடுத்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கலியைப் பறித்துக் கொண்ட மர்மக் கும்பல் அவரிடம் போலி நகையை கொடுத்து விட்டு தப்பிச் சென்றது.
 எனவே, அதிகளவில் கிராமப்புற மக்கள் கூடும் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நான்கு திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைவீதியிலுள்ள கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வாழப்பாடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
 பூட்டிக் கிடக்கும் காவல் உதவி மையம்: வாழப்பாடி பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை சீரமைத்தல், குற்றவாளிகளை கண்காணித்து குற்றச்செயல்களை தடுத்தல், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிடும் நோக்கில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வாழப்பாடி காவல் நிலையம் சார்பில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தில் காவலர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு பேருந்து நிலையப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
 ஆனால் கடந்த சில மாதங்களாக காவல் உதவி மையம் திறப்பதற்கு ஆளின்றி மூடிக்கிடக்கிறது. எனவே, தினந்தோறும் காவல் உதவி மையத்துக்கு வாழப்பாடி காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவலரை நியமித்து, தினந்தோறும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உதவிட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com