Enable Javscript for better performance
போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முதல்வருக்கு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முதல்வருக்கு கோரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2019 04:24 AM  |   அ+அ அ-   |    |  

    போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சேலம் மாநகராட்சி 20 மற்றும் 23 ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட ரயில் நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, காட்டூர், அண்ணாநகர் மற்றும் சேலத்தாம்பட்டி பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    இப்பகுதி மக்கள் சூரமங்கலம் மற்றும் நகரப் பகுதிக்குச் செல்லும் வேண்டுமெனில், பழைய சூரமங்கலம் அல்லது சிவதாபுரம் ஆகிய பகுதிகளுக்கு 7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.
    இதையடுத்து, போடிநாயக்கன்பட்டியில் 3 அடியில் ரயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்த வழியில், பொதுமக்கள் சென்று வந்தனர். இதனால் 7 கிலோ மீட்டர் சுற்றி தான் மாநகர பகுதிக்குச் சென்று வந்தனர்.
    இதனால் போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை அகலப்படுத்திட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    இந்த நிலையில் ரயில்வே தரைப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2017 இல் ரயில்வே சார்பில் பாலத்தைக் கட்டவும், அதற்கான கட்டுமானத் தொகையை ரூ. 2.43 கோடியை சேலம் மாநகராட்சி வழங்கியது.  
    இதைத்தொடர்ந்து போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து திட்ட மதிப்பில் கூடுதலாக ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது என ரயில்வே நிர்வாகம், சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மேலும் ரூ. 40 லட்சம் நிதியை மாநகராட்சி நிர்வாகம், ரயில்வே நிர்வாகத்திற்கு ஒதுக்கியது.இதைத்தொடர்ந்து தரைப்பாலம் விரிவுப்படுத்தும் பணிகள் முடிவடைந்தன. இதனிடையே பாலத்தில் இருந்து ரயில்நிலையம் செல்லும் வரை இணைப்பு சாலை அமைக்கப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாமல் உள்ளது. இந்தப் பாலத்தில் கழிவு நீர், மழை நீர் தொடர்ந்து தேங்கி நின்று பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி வருகிறது. 
    இணைப்புச் சாலை அமைத்து பாலத்தைத் திறப்பதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் 35 ஆண்டுகளுக்கு குத்தகை தொகை ரூ. 2.26 கோடி மாநகராட்சி செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த குத்தகைத் தொகை விவகாரம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
    இதுதொடர்பாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான வரிகளை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறது.
    அந்த வகையில், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள இடத்தைப் பயன்படுத்திட 35 ஆண்டு காலத்துக்கு குத்தகை தொகையாக சுமார் ரூ. 2 கோடி செலுத்தமாறு, மாநகராட்சியிடம் தெரிவித்துள்ளோம். இந்தக் குத்தகை தொகையை உடனே செலுத்த வேண்டியதில்லை. மாறாக குத்தகை தொகையை  செலுத்த தயாராக உள்ளோம் என எழுத்து பூர்வமாக தெரிவிக்கும்பட்சத்தில், பாலத்திற்கு இணைப்பு சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட முடியும்
    என்றனர்.
    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
    போடிநாயக்கன்பட்டி பாலத்தை கட்ட ரூ. 2.83 கோடி நிதியை, ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளோம். கடந்த 2015 முதல் கடித போக்குவரத்தில், குத்தகை செலுத்துவது பற்றி ரயில்வே நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
    தற்போது குத்தகை செலுத்துவது பற்றி தெரிவித்திருக்கிறது. மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கி பாலத்தைக் கட்டி தந்துள்ளோம். தற்போது திடீரென குத்தகை தொகையை கட்டுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றனர். 
    இதனிடையே சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மா.குமரன், முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், போடிநாயக்கன்பட்டி ரயில்வே தரைப்பாலம் முதல் சேலம் சந்திப்பு வரையிலான இணைப்புச் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 
    மேலும், ரயில்வே மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தங்களது நிர்வாக ரீதியான மோதல் போக்கை கைவிட்டு, தரைப்பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுமூகமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     

    kattana sevai