கறவை மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம்: களைகட்டும் மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை

கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதோடு, பெரும்பாலான பகுதிகளில்
கறவை மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம்: களைகட்டும் மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை

கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதோடு, பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை பெய்ததால்,  கால்நடை வளர்ப்புக்கு தேவையான பசுந்தீவனம் தட்டுப்பாடின்றி கிடைத்து வருவதால்,  சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  
வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம்,  முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருள்கள்,  ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய்,  வெண்ணெய், ஐஸ்கிரீம்,  பால் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. 
கடந்த இரு ஆண்டுகளாக வாழப்பாடி பகுதியில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவியதால்,  விளைநிலங்களும், மேயச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட தரிசு நிலங்கள், நீர்நிலைகளின் கரையோரங்களும் காய்ந்து போயின.  இதனால் கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
கால்நடைகளுக்கு மாற்று தீவனமாகக் கொடுக்கப்படும் கலவை தீவனம், கருக்காதவிடு,   பிண்ணாக்கு,  பருத்திக்கொட்டை, மரவள்ளி மற்றும் மக்காச்சோள கழிவு ஆகியவற்றின் விலையும்,  நெற்கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்,  சோளத்தட்டை விலையும் இரு மடங்காக உயர்ந்தது.  விவசாயக் கிணறுகளும், ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு போனதால்,  கால்நடைகளைப் பராமரிப்பதற்கு போதிய தண்ணீர் கிடைப்பதிலேயே தட்டுப்பாடு ஏற்பட்டது. 
இதனால், பால் உற்பத்தியில் கிடைக்கும் வருவாயை விட,  கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரித்ததால்,  கறவை மாடுகளை வளர்க்க முடியாமல் பரிதவித்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கறவை மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  ஏராளமானோர் கறவை மாடு வளர்ப்பைத் தவிர்த்து வந்தனர்.
இந் நிலையில்,  கடந்த ஒரு மாதமாக சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால்,  கடந்த ஓராண்டாக நிலவிய வறட்சியில் பொட்டல்காடாகக் கிடந்த விளைநிலங்களும்,  தரிசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களிலும், கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகும் தாவரங்கள் வளர்ந்து மீண்டும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளன. இதற்கிடையே,  பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.  இதனால், நலிந்து போன கறவைமாடு வளர்ப்பு தொழில், சேலம் மாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.  கன்று ஈன்று பால் கறக்கும் தருணத்திலுள்ள கறவை மாடுகளை கொள்முதல் செய்து வளர்ப்பதில் விவசாயிகளிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளதால்,  கறவை மாடுகளின் விலையும் உயர்ந்துள்ளது.
வாரந்தோறும் கூடும் பிரபல மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில், கறவை மாடுகள் விற்பனை மீண்டும் களை கட்டியுள்ளது.  வாரந்தோறும் 400-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனையாகி வருகின்றன.  கடந்த இரு மாதங்களுக்கு முன் ஏறக்குறைய ரூ.30,000-க்கு விற்கப்பட்ட கறவை மாடுகள் கடந்த சில வாரங்களாக ரூ. 35,000-க்கு விலை போகிறது. கறக்கும் பால் அளவுக்கு ஏற்ப ஒரு கறவைமாடு ரூ. 30,000-இல் இருந்து ரூ. 80,000 வரை விலை போவது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com