மயான வசதி இன்றி கிராம மக்கள் தவிப்பு: சடலத்தை சாலையில் வைத்துப் போராட்டம்

கெங்கவல்லி அருகே  வீரகனூர் பேரூராட்சிக்குள்பட்ட  ராமநாதபுரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து

கெங்கவல்லி அருகே  வீரகனூர் பேரூராட்சிக்குள்பட்ட  ராமநாதபுரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தரக் கோரி சடலத்துடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் இறந்துபோனால் அடக்கம் செய்வதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால்  அங்குள்ள ஓடையில் சடலத்தை எரித்தும்,  புதைத்தும் வருகின்றனர்.
இதனிடையே மழை காலங்களில் ஓடையில் புதைக்கும் சடலங்கள் ஓடை தண்ணீரில் அடித்து செல்வதோடு மர்ம விலங்குகள் சடலத்தை தோண்டி வெளியில் போட்டு விடுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல முறை தமிழக முதல்வருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து
வருகின்றனர்.
இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மழைக் காலம் நிலவி வரும் நிலையில் உயிரிழந்த இருவரது உடலை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் இறந்து போன பூமாலை, சின்ராஜ் ஆகிய இரண்டு பேரில் ஒருவரின்  சடலத்தை சாலையோரத்தில் எரியூட்டியதோடு மற்றொருவரின் சடலத்தை ஓடையில் புதைத்தனர்.
சாலையோரத்தில் எரியூட்டப்படும் சடலத்தால் அப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டதோடு அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு பகுதியை மீட்டு இறந்துபோனவர்களின் சடலங்களை புதைக்க மயானம் அமைத்துத் தரக் கோரி ராமநாதபுரம் மக்கள் வீரகனூர்-வெள்ளையூர் செல்லும் சாலையில் இறந்துபோன பூமாலை சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வீரகனூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி மயான இடத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து கூறியதாவது:
இப்போதுதான் இப் பிரச்னை என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களிடம் இருந்து ஏற்கெனவே மனு பெறப்பட்டு அந்தக் கோப்பு நிலுவையில் இருந்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com