பச்சனம்பட்டியில் மழைநீர் புகுந்ததில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், தறி பட்டறைகள் சேதம்

ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை இரவு விடிய விடிய பெய்த மழையால் வீடுகள், தறிப் பட்டறைகளுக்குள் மழைநீரில் புகுந்தது

ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை இரவு விடிய விடிய பெய்த மழையால் வீடுகள், தறிப் பட்டறைகளுக்குள் மழைநீரில் புகுந்தது
 ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அனைத்துக் கிராமங்களிலும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. மழையால் பல்வேறு கிராமங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
பழமையான பள்ளிகளின் கட்டடங்களும் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைநீர் செல்லும் கால்வாய்கள் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. நள்ளிரவு பெய்த மழைநீர் கால்வாய் வழியாக வெளியேற முடியாமல் ஊருக்குள் புகுந்தது.
கோயிலில் மக்கள் தஞ்சம்...
இதில், வீடுகளை சுமார் ஐந்து அடி வரை தண்ணீர் உயர்ந்து உள்ளே புகுந்தது. மளமளவென தண்ணீர் தெருவுக்குள் புகுந்து அங்குள்ள செல்வம், ஜெகன், செல்வராஜ், இளங்கோ, மங்கா, சீதா, பழனிச்சாமி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளிலும், பூவரசன், பாப்பா ஆகியோரது தறி பட்டறைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அங்குள்ள கோயில்களில் தஞ்சமடைந்தனர். வீடுகளில் இருந்து பீரோ, கட்டில், டிவி, காஸ் சிலிண்டர், துணிமணிகள் மற்றும் உணவு தானியங்களில் புகுந்து அனைத்தும் வீணானது.
வீடுகளில் இருந்த பல்வேறு பொருள்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தறிப் பட்டறையில் இயந்திர தறிகள் முழுமையாகச் சேதமடைந்தன.
மேலும், நூல்கள், பண்டல்கள், நெய்த சேலைகள் அனைத்தும் மழை நீரில் வீணானது. இதனால், இந்தப் பகுதியில் சுமார் 35 லட்ச ரூபாய்  மதிப்பிலான பொருள்கள், வீடுகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், இங்குள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், வீடுகள், உடைமைகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தறி, தொழில்களை இழந்த மக்களுக்குப் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கால்வாய்களின் அடைப்பையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி சீரமைக்க வேண்டும். தண்ணீர் பாதிப்பில்லாமல் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com