போலி மருத்துவர் நடத்திய மருத்துவமனைக்கு "சீல்': ஆட்சியர் அதிரடி

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் தூய்மைப் பணியை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன்

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் தூய்மைப் பணியை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன் அங்கு போலி மருத்துவர் மருத்துவமனை நடத்தி வந்ததை அறிந்து அந்தக் கட்டடத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
ஓமலூர் வட்டாரத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கருப்பூரில் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, மாவட்ட திட்ட இயக்குநர் என். அருள்ஜோதி அரசன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெறும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார்.
அங்கே நீண்ட காலமாக முறையாக மருத்துவம் படிக்காமலேயே முருகன் என்பவர் போலி மருத்துவராக ஆங்கில மருத்துவம் செய்து வருவதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 
இதையடுத்து கிளினிக்குக்கு சென்று ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
இதை அறிந்த முருகன் கிளினிக்கை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், மருத்துவ கட்டடத்துக்கு வந்த அதிகாரிகள், கட்டடத்தின்  பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பார்வையிட்டனர்.
அப்போது கிளினிக்கிற்கு உள்ளே தடை செய்யப்பட்ட மருந்துகள், ஊசிகள், அதிக டோஸ் உள்ள ஆங்கில மருந்துகள் இருந்தன. இதையடுத்து அந்த கட்டடத்துக்கு "சீல்' வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர், ஊராட்சியில் நடைபெறும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அப்போது அங்கே கூடிய  பெண்கள் இங்குள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மிகப் பெரிய அளவில் இருந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வாய்க்காலாக மாறி விட்டன.
இதனால், மழைநீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகள், பள்ளிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மழைநீர் கால்வாய்கள் அடைப்பால் கால்வாயில் செல்லாமல் வீட்டுக்குள் புகுந்து விட்டன. அதனால், குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு கோயிலில் தஞ்சமடைந்து விட்டதாகவும், இதைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பொதுமக்கள் கூறியதாவது: சந்தைப் பகுதியிலிருந்து முத்துநாயக்கன்பட்டி ஏரி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி அடைப்பும் உள்ளது. இதனால், ஓடையில் செல்ல வேண்டிய தண்ணீர் ஊருக்குள் புகுந்து வீட்டுக்குள் நிரம்புவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com