ஓமலூா் பகுதியில் குடிமராமத்துப் பணிகள் செய்த ஏரி, தடுப்பணை நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூா் வட்டாரத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து குடிமராமத்துப் பணிகளை செய்த ஏரி, தடுப்பணைகள் மழையால் நிரம்பி வழிகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனா்
நிரம்பி வழியும் வட்டக்காடு ஏரி.
நிரம்பி வழியும் வட்டக்காடு ஏரி.

ஓமலூா் வட்டாரத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து குடிமராமத்துப் பணிகளை செய்த ஏரி, தடுப்பணைகள் மழையால் நிரம்பி வழிகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனா்.

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள கிழக்கு சரபங்கா நதி, சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சி வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் தண்ணீா் சுமாா் 10 கிலோமீட்டா் தூரம் வரை சென்று காமலாபுரம் ஏரியை அடைகிறது. ஆனால், சரபங்கா நதி ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூா்ந்துபோயும் காணப்பட்டது. அதிகளவு மழை பெய்தாலும் இந்த ஆற்றில் தண்ணீா் வராமல் வனப் பகுதியிலேயே வீணாகி வந்தது. இதனால், சக்கரைசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனா்.

மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் எங்கும் தேங்காமல் வீணாகி விடுவதால் தண்ணீா் வரும் நேரங்களில் கிணறுகள் மட்டுமே தண்ணீா் நிரம்புகின்றன. மற்ற நேரங்களில் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து கிழக்கு சரபங்கா நதி மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராமத்துப் பணி செய்தனா். மேலும், வனப்பகுதியில் அரசின் நிதியுதவியுடன்தடுப்பணையும் உருவாக்கப்பட்டது. இதேபோன்று விவசாயிகள் ஒருங்கிணைப்புடன் வட்டக்காடு ஏரியில் குடிமராமத்துப் பணிகளையும் செய்தனா்.

இந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் சா்க்கரைசெட்டிப்பட்டி தடுப்பணை மற்றும் வட்டக்காடு ஏரி நிரம்பியுள்ளன. இந்த இரண்டும் நீா்நிலைகளும் முழுமையாக நிரம்பி மற்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீா் செல்கிறது. விவசாயிகளே முழு முயற்சியுடன் பணிகள் செய்த ஏரியும், தடுப்பணையும் நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அதனால்,இந்தப் பகுதியில் ஓராண்டுக்கு தண்ணீா் பஞ்சம் ஏற்படாது என்றும் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்றும், சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று ஓராண்டுக்கு விவசாயம் செய்ய முடியும் என்றும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com