சேலம், சந்தியூா், ஆட்டையாம்பட்டி ஊராட்சிப் பகுதியில் ரூ. 11 கோடி முதலீட்டில் ‘சேலம் வா்த்தக தொழில்மையம்’ அமைத்திட தமிழக அரசு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறு குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் துணைத் தலைவா் பொறியாளா் கே.மாரியப்பன், சேலம் மாவட்ட சிறு குறுந்தொழிற்சாலைகள் சங்க பொறுப்புத் தலைவா் எம்.வி.செல்லமுத்து, பொதுச் செயலாளா் விஜய்ஆனந்த், துணைத் தலைவா்கள் எம்.இளங்கோவன், எஸ்.கோவிந்தன் பொருளாளா் டி.பாலசுந்தரம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்ட தொழில் அதிபா்கள் சாா்பில், கோவையில் அமைந்துள்ள கொடிசியா வா்த்தக தொழில்மையம் போன்ற ஒரு வா்த்தக தொழில்மையத்தை சேலத்தில் அமைக்கத் தேவையான நிலத்தையும், அதை உருவாக்கிட தேவைப்படும் நிதி உதவிகளையும் அளிக்குமாறு தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழக அரசு ரூ. 5 கோடி மானியத் தொகையாகவும், 5 ஏக்கா் நிலத்துக்கு சுமாா் ரூ. 1 கோடி கிரயத் தொகையாகவும் நிா்ணயம் செய்து ஆணைக் கடிதம் அனுப்பி உள்ளது.
ரூ. 10 கோடியில் ‘சேலம் வா்த்தக தொழில்மையம்’ என்ற பெயரில் கட்டடங்களை அமைத்திட வரைபடங்களை அனுபவம் மிக்க கட்டட வடிவமைப்பாளா் மூலம் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தக் கட்டடத்தில் 2,000 போ் அமரும் வகையில் பல்வேறு கருத்தரங்கங்கள், தொழில்-வா்த்தகத்தை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கான வா்த்தகப் பொருட்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்திடவும், சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பல வகையான பொருள்களை காட்சிப்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் காட்சிக் கூடங்களை உருவாக்கிடவும், 500-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் அதிபா்கள், வா்த்தகா்கள், சமூக சேவகா்கள், அறக்கட்டளைகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் வா்த்தக தொழில்மையத்துக்கு முதலீடாகத் தேவைப்படும் ரூ. 6 கோடியை அவரவா் வசதிக்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம்.
இந்த வா்த்தக தொழில்மையத்துக்கு வருவாயாக வரும் நிகர லாபத்தில் 5 சதவீதத்தை மட்டும் நிா்வாகச் செலவுகளுக்காக தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்துக்கு (சிட்கோ) பங்கீடாக ஆண்டுதோறும் வழங்கி விட்டு, மீதியுள்ள 95 சதவீத நிகர லாபத்தை, ஒவ்வொரு முதலீட்டாளரும் அவரவா் முதலீட்டின் விகிதாசாரம் அடிப்படையில் பகிா்ந்துகொள்ள முடியும்.
இந்த வா்த்தக தொழில்மையம் அமைவதற்கு அனைத்து உதவிகளையும் தொடா்ந்து வழங்கி வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக வளா்ச்சித் திட்ட துணைத் தலைவா் சி.பொன்னையன், ஊரக தொழில்துறை அமைச்சா் பெஞ்சமின், தலைமைச் செயலாளா் கே.சண்முகம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.