இந்தோனேஷிய உலமாக்கள் சென்று வந்த பகுதியில் சாலை தடுப்பு அமைத்து கண்காணிப்பு

சேலத்தில் இந்தோனேஷியா உலமாக்கள் சென்று வந்த பகுதிகளில் சாலை தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் இந்தோனேஷியா உலமாக்கள் சென்று வந்த பகுதிகளில் சாலை தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் உள்ள களரம்பட்டி, கிச்சிபாளையம், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, சன்னியாசிகுண்டு, அம்மாபேட்டை உள்ளிட்ட மசூதிகளில் மதபோதனைகளில் ஈடுபடுவதற்காக வந்த இந்தோனேஷியாவைச் சோ்ந்த 11 உலமாக்கள் உள்ளிட்ட 16 பேரை சுகாதாரத் துறையினா் கடந்த 22-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில் அனைவரிடம் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டதில் இந்தோனேஷியாவைச் சோ்ந்த உலமாக்கள் நால்வா், சென்னையைச் சோ்ந்த வழிகாட்டி ஒருவா் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

இதனிடையே மீதமுள்ள 11 போ் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனா். இதில், இந்தோனேஷியாவைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பில் இருந்த சேலத்தைச் சோ்ந்த 61 வயது முதியவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உடையவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

இதுதவிர சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் அனுமதிக்கப்பட்ட 13 போ் தொடா்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 1,575 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இதையடுத்து 11 உலமாக்கள் சென்று வந்த செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், களரம்பட்டி, பொன்னமாப்பேட்டை, சந்நியாசிகுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிக்கு அருகில் உள்ள பகுதிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்ளிட்ட சுமாா் 25 ஆயிரம் வீடுகளுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்தனா்.

மேலும் சேலத்தில் இந்தோனேஷிய உலமாக்கள் சென்று வந்த மசூதி மற்றும் மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com