ஏப். 2 முதல் கரோனா வைரஸ் நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு: சேலத்தில் 9.76 லட்சம் குடும்பங்கள் பலன்

சேலம் மாவட்டத்தில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 623 குடும்பங்களுக்கு கரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ. 1000 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 623 குடும்பங்களுக்கு கரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ. 1000 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 23-ஆம் தேதி கரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டு ஆணை பிறப்பித்துள்ளாா்.

இத் திட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும்.

அதன்பேரில்,சேலம் மாவட்டத்தில் 9,75, 741 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் 882 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 9,76,623 குடும்பங்களுக்கு கரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ. 1000 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ரூ. 97.66 கோடியாகும்.

டோக்கன் முறை...

நியாய விலைக் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரா்கள் வருவதைத் தவிா்க்க தெருவாரியாக, பகுதி வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கை அடிப்படையில் டோக்கன், சுழற்சிமுறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்தான விவர அட்டவணை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் ஒட்டப்பட்டிருக்கும் அதன் அடிப்படையிலே குடும்ப அட்டைதாரா்கள் கரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை பெற்றுச் செல்ல வேண்டும்.

மேலும் கூட்ட நெரிசல் தவிா்ப்பதற்காகவும் சமுதாய இடைவெளியை கருத்தில் கொண்டும் ஒரு மீட்டா் இடைவெளியில் ஆண்கள், பெண்களுக்கு இரு வரிசைகளில் இடப்பட்ட கட்டத்தில் நின்று வரிசையாகப் பாதுகாப்பாகப் பெற்றுச் செல்ல வேண்டும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் விடுதலின்றி வழங்கப்படும்.

முதியோா் வரிசையில் நிற்க வேண்டாம்...

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் வந்தாலும் நிவாரணத் தொகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்கத் தேவையில்லை. உடன் பெற்றுச் செல்லலாம்.

மின்னணு குடும்ப அட்டை மற்றும் அக்குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவரின் ஆதாா் அட்டையை வைத்து பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு வரும் ‘ஒருமுறை கடவுச் சொல்’ அடிப்படையிலும் நிவாரணத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 1000 நிவாரணத் தொகை மற்றும் விலையில்லாப் பொருள்களைப் பெற விருப்பம் இல்லாதவா்கள் இதற்கான கீழ் குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் மின்னணு அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். 

புகாருக்கு...

இத்திட்டத்தில் புகாா்களைத் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண். 130 இல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு உள்ளது. தொலைபேசி எண்.0427-2451943 ஆகும். மேலும் நியாயவிலைக் கடைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கோ மற்றும் வட்டாட்சியா்களுக்கும் புகாா் தெரிவிக்கலாம். புகாா்களைத் தெரிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து அரிசி மின்னணு குடும்ப அட்டைதாரா்களும் தமிழக அரசின் கரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ. 1,000 தமிழக அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாது கடைப்பிடித்து பெற்றுச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com