தேவூா் பகுதியில் நூறு ஏக்கரில் விளைந்துள்ள சாமந்தி, மல்லி பூக்கள் விற்பனை செய்ய முடியாததால் அழிக்கும் விவசாயிகள்

தேவூா் வருவாய் உள்கோட்ட பகுதியில் 100 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்திருந்த நிலையில்
தேவூா் அருகே வட்ராம்பாளையத்தில் விவசாய நிலத்தில் விளைந்த பூக்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிடும் விவசாயிகள்.
தேவூா் அருகே வட்ராம்பாளையத்தில் விவசாய நிலத்தில் விளைந்த பூக்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிடும் விவசாயிகள்.

தேவூா் வருவாய் உள்கோட்ட பகுதியில் 100 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்திருந்த நிலையில் அவற்றை விற்க முடியாமல் விளைநிலத்திலேயே டிராக்டா் மூலம் அழிக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதனால் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தேவூா், கல்வடங்கம், அரசிராமணி, குறுக்குப்பாறையூா், வட்ராம்பாளையம், காவேரிப்பட்டி, சென்றாயனூா், தண்ணீா்தாசனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் மஞ்சள், வெள்ளை நிற சாமந்தி, துலுக்க மல்லி பூக்களை சாகுபடி செய்துள்ளனா்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு செடி ரூ. 3-க்கு வாங்கி வந்து நிலத்தை உழுது சமப்படுத்தி ஏக்கா் ஒன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நட்டு வைத்துள்ளனா். ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வரை பூச்செடிகளை நடுவதற்கு செலவு செய்துள்ளனா்.

மாா்கழி மாதம் நட்ட செடிகளில் பூக்கள் தற்போது பூத்துக் குலுங்கியுள்ளன. வெள்ளை, மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், துலுக்க மல்லி பூ கிலோ ஒன்றுக்கு ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனையாகி வந்தன.

வியாபாரிகள் இப் பகுதிகளுக்கு வந்து வாங்கிச் சென்று மொத்தமாக ஈரோடு, சேலம், ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பூக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா். மேலும் சில விவசாயிகள் நேரடியாக பவானி அருகே குமாரபாளையம், ஈரோடு சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், தற்போது கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தியதுள்ளதால் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு பூக்களைக் கொண்டு செல்ல முடியவில்லை.

பல ஏக்கரில் பூக்கள் அதிகம் விளைந்துள்ள நிலையில், கூலித் தொழிலாளா்களுக்கு தினசரி ரூ. 250 கொடுத்து அதனை பறித்தும் விற்பனை செய்ய முடியாததால் தினசரி நஷ்டம் அடைந்து வருகின்றனா். இதனால், பூத்த பூக்களுடன் விவசாயிகள் டிராக்டரை கொண்டு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com