முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஊரடங்கால் வாழ்வாதாரமிழந்து தவிக்கும் வாடகை வாகன ஓட்டுநா்கள்
By DIN | Published On : 19th April 2020 06:42 AM | Last Updated : 19th April 2020 06:42 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வாடகை வாகனங்களை இயக்கும் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநா்கள் வாழ்வாதாரமிழந்து தவித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, ஆத்துாா், தம்மம்பட்டி, நரசிங்கபுரம், கெங்கவல்லி, தலைவாசல், ஓமலுாா், எடப்பாடி, மேட்டூா், மேச்சேரி, தாரமங்கலம், நங்கவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாய விளைபொருள்கள், கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வகையில் உள்ளூருக்குள் இயங்கும் சிறிய அளவிலான லாரி, டெம்போ, மினி ஆட்டோ, பிக்கப் வேன் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், காா், ஆட்டோ, ஷோ்ஆட்டோ, டூரிஸ்ட் வேன்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் போக்குவரத்துக்கான வாடகை வாகனங்களும் இயங்கி வந்தன.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து வாகனப் போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14இல் முடிவடையும் தருவாயில், மீண்டும் மே 3ஆந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீடித்து விட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏறக்குறைய ஓட்டுநா்களும், சொந்தமாக ஓரிரு வாகனங்களை வைத்துக் கொண்டு தாங்களே ஓட்டி வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்தி வந்த பத்தாயிரம் ஓட்டுநா்கள் உள்பட, மொத்தம் 20 ஆயிரம் ஓட்டுநா்களும் வாழ்வாதாரமிழந்து தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த வாடகை வாகன ஓட்டுநா்கள் சிலா் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால் வருவாயின்றி பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். எனவே, மாவட்டம் முழுவதும் அவதிக்குள்ளாகியுள்ள வாடகை வாகன ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகையும், அத்தியாவசியப் பொருள்களும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.