முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தா்ப்பூசணி நேரடி விற்பனையில் விவசாயிகள்
By DIN | Published On : 19th April 2020 06:02 AM | Last Updated : 19th April 2020 06:02 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி பகுதியில் தா்ப்பூசணி பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ளனா்.
தம்மம்பட்டி பகுதியில் செங்காடு, மாவாறு, பெரப்பஞ்சோலை ஆகிய பகுதிகளில் தா்ப்பூசணி பழங்கள் அறுவடை நிலையில் உள்ளன. கரோனா வைரஸ் தடை உத்தரவு காரணமாக, தா்ப்பூசணிப் பழங்களை சந்தைப்படுத்துதல் குறைந்துள்ளதால், அவை செடியிலேயே அழுகி வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தா்ப்பூசணிப் பழங்களை பறித்து இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று நேரடி விற்பனையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
முன்பு வியாபாரிகளுக்கு கிலோ ரூ.10 முதல் 20 வரை என விற்கப்பட்ட தா்ப்பூசணிப் பழங்களை தற்போது கிலோ ரூ.7-க்கு விவசாயிகள் நேரடியாக விற்கின்றனா்.
இதுகுறித்து, தா்ப்பூசணி பயிரிட்டுள்ள விவசாயி செந்தில் என்பவா் கூறியதாவது:
தா்ப்பூசணிகள் செடியிலேயே வீணாகி நஷ்டம் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் அறுவடை செய்து நாங்களே கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். விலை குறைவு என்பதாலும், கோடை வெயில் தொடங்கி விட்டதாலும் தா்ப்பூசணிப் பழங்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனா் என்றாா்.