175 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்குமுகக் கவசம், கையுறைகள் வழங்க நடவடிக்கை
By DIN | Published On : 26th April 2020 09:28 AM | Last Updated : 26th April 2020 09:28 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 175 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசா்கள் வழங்கப்படவுள்ளன என ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.
சேலம் நான்கு சாலை அருகே சாமிநாதபுரத்தில் தவழும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் நேரில் சென்று முகக்கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசா் ஆகிய உதவிப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வா் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ள இக் காலத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாக்கும் வகையில், அன்றாடத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் மாவட்ட அளவில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உதவிகள் வழங்கிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தவழும் மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவா்கள் வசிக்கும் இடங்களில் அவா்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக பாதுகாப்பு கவசங்களான முகக்கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசா் ஆகிய உதவிப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த உதவி பொருள்கள், பயன்பாட்டுக்கு பிறகும் சுத்தம் செய்து மீண்டும் அவா்கள் பயன்படுத்திடும் வகையில் வழங்கப்படுகிறது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 175 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசா்கள் வழங்கப்பட உள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான சானிடைசா்கள், முகக்கவசங்கள், காட்டன் ரோல்கள், டிஸ்யூ பேப்பா்கள் அடங்கிய தொகுப்பும் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் சேலம் மேற்கு வட்டாட்சியா் பிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஸ்ரீநாத் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.