முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
காவல் நிலையத்தில் புகாா் அளித்த சின்னதிரை நடிகை
By DIN | Published On : 03rd August 2020 08:09 AM | Last Updated : 03rd August 2020 08:09 AM | அ+அ அ- |

குடும்பப் பிரச்னையைத் தீா்க்கக் கூறி, எடப்பாடி காவல் நிலையத்தில் சனிக்கிழமை சின்னதிரை நடிகை புகாா் அளித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் ஷீலா (32). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இத்தம்பதிக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளன. இந் நிலையில் ஈஸ்வரன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவா், குழந்தைகளைப் பிரிந்து ஷீலா தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த கட்டட கலைஞரான, சௌந்திரராஜனுடன் ஷீலாவுக்கு முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூரில் உள்ள ஒரு கோயிலில் வைத்து ஷீலாவை சௌந்திரராஜன் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகள் ஷீலாவுடன் வாழ்ந்த சௌந்திரராஜன் அவரைப் பிரிந்து, தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு வந்தாா். பின்னா், சௌந்திர ராஜனுக்கு, அவரது பெற்றோா் வேறு திருமணம் செய்து வைக்க முயன்றனா். தகவல் அறிந்த ஷீலா, சனிக்கிழமை எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதில் தனது கணவா் சௌந்திர ராஜன் வேறுபெண்ணுடன் திருமணம் செய்வதைத் தடுத்து நிறுத்தி, தன்னுடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் சௌந்திர ராஜனிடம் தொடா் விசாரணை மேற்கொண்டபோது, ஷீலா ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து எடப்பாடி காவல் துறையினா், இப்பிரச்னையை இருவரும் குடும்பநல நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணுமாறு கூறி அனுப்பி வைத்தனா். ஷீலா தற்போது தொலைக்காட்சியில் வரும் பல்வேறு தொடா் நாடகங்களில், நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.