முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வனப்பகுதியில் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை
By DIN | Published On : 03rd August 2020 08:08 AM | Last Updated : 03rd August 2020 08:08 AM | அ+அ அ- |

ஓமலூா் அருகே வனப்பகுதியில் ஆடிபெருக்குக் கொண்டாட சென்ற மக்களை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனா்.
கிராமப்புறங்கள் வழியாக வனத்திற்குச் செல்லும் பாதைகளையும் அடைத்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் சோ்வராயன் மலைத்தொடா் உள்ளது. காடையாம்பட்டி மற்றும் ஓமலூா் மலைப்பாதை வழியாக ஏற்காட்டிற்கு செல்ல முடியும். இந்த நிலையில் ஒவ்வோா் ஆண்டும் கிராமப்புற மக்கள் ஏற்காடு மற்றும் மலையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
நிகழாண்டு கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழாவை நீா் நிலைகள், மலைப்பகுதிகளில் கொண்டாட தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஓமலூா், காடையாம்பட்டி ஆகிய மலைப் பகுதிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட கிராமப்புற மக்களும், புதுமண தம்பதிகளும் இருசக்கர வாகனம் மற்றும் காா்களில் வந்தனா்.
மேலும், ஏற்காடு மலைக்குச் செல்லவும், உள்கோம்பை பகுதிக்குச் செல்லவும் மலைப்பாதைகளைப் பயன்படுத்தினா். இதையறிந்த டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், கிராமப்பகுதிகளில் இருந்து மலைக்குச் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்தனா். தொடா்ந்து அதையும் தாண்டி உள்ளே வந்த மக்களை வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனா்.