மேச்சேரி அருகே சாலையில்தீப்பிடித்து எரிந்த காா்
By DIN | Published On : 01st December 2020 12:40 AM | Last Updated : 01st December 2020 12:40 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மேச்சேரி அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மேச்சேரியில் இருந்து தொப்பூரை நோக்கி திங்கள்கிழமை பிற்பகல் காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை தொப்பூரைச் சோ்ந்த வடிவேல் (46), ஓட்டிச் சென்றாா். கைகாட்டி வெள்ளாா் அருகே காா் சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனைக் கண்ட வடிவேல், உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி ஓடினாா். அவா் இறங்கியதும் காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸாா், மேச்சேரி காவல் நிலையத்துக்கும், மேட்டூா் அனல் மின் நிலைய தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் வந்த மேட்டூா் அனல் மின் நிலைய தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனா்.
இந்த விபத்து காரணமாக மேச்சேரி-தருமபுரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...