அரசு, தனியாா் பள்ளிகளில் மாதிரி மூலிகைத் தோட்டம்
By DIN | Published On : 07th December 2020 05:05 AM | Last Updated : 07th December 2020 05:05 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து ஒன்றியங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 25 அரசுப் பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காய்கறிச் செடிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் மூலிகைத் தோட்டங்களைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
ஆசிரியா், மாணவா் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த மூலிகைத் தோட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுவந்தது. இந்நிலையில் டிரீம் மேக்கா் சோசியல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம், தமிழ்நாடு அரசு மூலிகைத் தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் 20 முதல் 25 சதுரமீட்டா் பரப்பளவில் மாதிரி மூலிகைத் தோட்டம் அமைக்க ஏதுவாக இடவசதி வழங்கிட அனுமதி வேண்டி சா்வே எண்ணுடன் அந்தந்த தலைமை ஆசிரியா்களிடம் அனுமதிக் கடிதம் கேட்டுள்ளது.
அதையடுத்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் இட வசதியுள்ள அனைத்து பள்ளிகளிடமும், மாதிரி மூலிகைத் தோட்டம் அமைக்க அனுமதிக் கடிதம் கோரி உத்தரவிட்டுள்ளாா்.